கர்நாடகாவில், இந்தி மொழி பேசவேண்டும் என டாக்சி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர், தற்போது கன்னடத்தில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பெங்களூருவில், கடந்த 20 ஆம் தேதி, டாக்சியில் வந்த இளைஞர் ஒருவர், டாக்சி ஓட்டுநரிடம் , நொய்டாவில் இருந்தாலும் சரி, பெங்களூருவில் இருந்தாலும் சரி, "நீ நொய்டாவில் இருந்தாலும் சரி, பெங்களூரில் இருந்தாலும் சரி, இந்தியில்தான் பேச வேண்டும்" என்று ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது தாய் மொழியான கன்னடத்தில், "நீ பெங்களூருக்கு வந்திருக்க. நீதான் கன்னடத்தில் பேசனும். நான் இந்தியில் பேச மாட்டேன்" என்று தீர்மானமாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, கன்னட மொழியில் மன்னிப்பு கேட்டு, அந்த இளைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ நான் கடந்த 9 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் செய்த விஷயத்திற்காக அருகில் உள்ள காவல்நிலையத்திலும் சென்று மன்னிப்பு கேட்டிருக்கிறேன். உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்" என கூறியுள்ளார்.