18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு நேற்று (ஜூன் 4) மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வீரர்கள் பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் சின்னசாமி மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுதும் அதிர்வலைகளையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. மதியம் 2.30 மணிக்கு விசாரணை நீதிபதி காமேஷ்வர ராவ் முன்னிலையில் தொடங்கிய விசாரணையின்போது அரசுத் தரப்பு, ”1,600 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். 11 பேர் பலியாகினர். 56 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூருவைச் சுற்றியுள்ள மைசூரு டூம்கூர் மாண்டியா மற்றும் 300 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ரசிகர்கள் திரண்டனர். சின்னசாமி மைதானத்தில் 34,600 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், 2.5 லட்சம் பேர் திரண்டனர். 15 நாட்களில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் மைதானத்தில் உள்ள 21 நுழைவு வாயில்கள் திறந்திருந்தன. அதில் கேட் எண் 6, 7, 8 ஆகிய பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டு 11 உயிரிழப்புகள் நடந்துள்ளன” என வாதம் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி, “இந்த நிகழ்ச்சியை நடத்தியது யார் அரசா அல்லது கிரிக்கெட் சங்கமா? ஒரே நேரத்தில் ’விதான் சவுதா பேரணி’ மற்றும் ’சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா’ ஆகிய இடங்களில் இரண்டு நிகழ்ச்சிகள் வைத்தது ஏன்? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டது” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி பெங்களூரு ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ நிர்வாகங்கள் பதில் தர உத்தரவிட்டு ஜூன் 10ஆம் தேதிக்கு அடுத்த விசாரணையை ஒத்திவைத்தார்.