ஆசிரியர் சந்தோஷ் குமார் எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா | தீ விபத்தில் சிக்கிய குழந்தைகள்.. பேருதவி செய்து நெகிழ வைத்த ஆசிரியர்.. ஆனாலும்..😓

கர்நாடகாவில் தீ விபத்தில் சிக்கிய தன் மாணவி மற்றும் அவரது தாய், சகோதரிகளின் உயிரைக் காக்க, அரசுப் பள்ளி ஆசிரியரொருவர் பெரியளவில் உதவி செய்துள்ளார். தற்போது அந்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. என்ன நடந்தது? பார்க்கலாம்...

ஜெ.நிவேதா

கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த டிசம்பர் 7ம் தேதி கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரு விபத்து ஏற்பட்டது. இதில் கதிஜா என்ற பெண்ணும், அவரின் இரு மகள்கள் ஜுலைக்கா மற்றும் ஃபாத்திமா, உறவுக்கார குழந்தை சல்மா என நான்கு பேர் கடுமையாக தீக்காயப்பட்டனர். விபத்துக்குப் பின் மீட்கப்பட்ட நால்வரும், அருகிலிருந்த மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கதிஜா டிச 10 அன்றும் மற்றும் அவரது மகள்கள் ஜுலைக்கா (14) டிச 26 அன்றும், ஃபாத்திமா (9) டிச 28 அன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர்.

சல்மா என்ற கதிஜாவின் உறவுக்கார சிறுமி மட்டும் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார். சமீபத்தில் சல்மா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், கதிஜாவின் குடும்பத்துக்கு, அவர் மகள்கள் படித்துவந்த அரசுப் பள்ளியின் ஆசிரியரொருவர் பெரியளவில் உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. என்ன நடந்தது? பார்க்கலாம்...

ஆசிரியர் சந்தோஷ்

கடந்த டிசம்பர் 7ம் தேதி கர்நாடகாவின் Manjanady என்ற கிராமத்தில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் கதிஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா, சல்மா.

இவர்களை, ஜுலைக்கா, ஃபாத்திமா, சல்மா படித்து வந்த மண்டேபவடு அரசுப்பள்ளியின் ஆங்கில ஆசிரியரான சந்தோஷ் குமார் தினமும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து பக்கபலமாக இருந்திருக்கிறார். கடந்த 21 நாட்களாக, தினம்தோறும் பள்ளி நேரம் முடிந்தவுடன் ஆசிரியர் சந்தோஷ் குமார் ஐ.சி.யூ வாசலில் வந்து நின்றுவிடுவார் என்று, கதிஜாவின் உறவினரான சயிஃப் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சயிஃப் மேலும் கூறுகையில், “உணர்வு ரீதியாக மட்டுமன்றி, பொருளாதார ரீதியாகவும் ஆசிரியர் சந்தோஷ் எங்களுக்கு உதவியாக இருந்தார். அக்குழந்தைகள் படித்த பள்ளியின் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் மருத்துவமனையில் குழந்தைகள் மூவரும் எதிர்கொள்ளும் சூழலை எடுத்துரைத்து ரூ 1 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்தார். சிகிச்சை பலனின்றி, தாய் மகள் என மூவர் இறந்தபின், இறுதி மரியாதை வரைக்கூட ஆசிரியர் சந்தோஷ் உடனிருந்தார். தன்னுடைய மாணவியான ஜூலைக்காவின் உடலைக்கூட சுமந்து வந்தார். விஷாந்த் என்ற மற்றொரு ஆசிரியரும்கூட இறுதி நிகழ்வில் இருந்தார்.

ஐசியூ

ஜமீலாவின் குடும்பம், தங்கள் உடைமைகள் அனைத்தையும் தீயில் இழந்துவிட்டனர். இதையறிந்து, குழந்தைகளின் பள்ளி தலைமை ஆசிரியர் ப்ரமிளா தன் அதிகாரத்தின்மூலம் குழந்தைகளின் எரிந்த ஆவணங்களை பெற்றுத்தருவதாக சொன்னார். இவையாவும் எங்களை நெகிழச் செய்துவிட்டது. இக்கட்டான நேரத்தில் ஆசிரியர்கள் நின்றது, உண்மையில் பேருதவியாக இருந்தது எங்களுக்கும்” என்றுள்ளார்.

ஆசிரியர் சந்தோஷ் இதுபற்றி ஊடகங்களிடம் கூறுகையில், “மாணவி ஜுலைக்கா விபத்துக்கு முன்தினம் பள்ளிக்கு வந்தபோது கூட என்னிடம் பேசினார். படிப்பாளி. அதிகம் பேசமாட்டார். அப்படிப்பட்ட குழந்தை, 60% தீக்காயங்களால் பாதிக்கப்பட்டதை அறிந்தபோது, எங்களாலேயே அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை மருத்துவமனையில் சந்திக்கும் வாய்ப்பாவது எனக்கு கிடைத்தது. உண்மையில் ஜுலைக்காவும் அவரது சகோதரிகளும், சிகிச்சையில் இருந்த நேரத்திலும் ‘பரிட்சை தேதி நெருங்குகிறது, படிப்பு பாதிக்கிறது’ என கவலை தெரிவித்தனர்.

‘நீங்கள் பாஸாகிவிடலாம், இப்போது அதை யோசிக்காதீர்கள்’ என அவர்களை சமாதனப்படுத்தவே பெரும்பாடுபட்டேன். என்னுடன் பணியாற்றும் எல்லா ஆசிரியர்களும், அந்த குழந்தைகளோடு மனதால் இணைந்திருந்தனர். எங்கள் சீரிய முயற்சிக்குப் பின்னரும், குழந்தைகள் இருவர் உட்பட மூவரை இழந்தது, ஆராத வடுவாக எங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க இருக்கும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆசிரியர் சந்தோஷ் இந்த விபத்தில் இருந்து மீண்டு வரும் சல்மாவின் உடல்நலனை விசாரித்து, அவர் கல்வியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.