வேண்டுகோள் விடுத்த ஈரான்.. மீண்டும் எண்ணெய் வர்த்தகத்தை தொடங்கும் இந்தியா!
இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையை ரஷ்யா மற்றும் அரபு நாடுகள் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு வரும்காலங்களில் இந்தியாவுடன் வர்த்தகத்தை மேம்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதிலும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டுமுதல் ஈரான் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதன்விளைவாக, 2019ஆம் ஆண்டுமுதல் அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது. இது, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேலும் மோசமாகப் பாதித்தது.
மறுபுறம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்துவரும் மோதல்களும் அதன் வர்த்தகத்தை மேலும் பாதித்துள்ளது. இந்தச் சூழலில்தான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவிக்கு வந்த அதிபர் மசூத் பெசெஷ்கியானின்கீழ் புதிய ஈரானிய நிர்வாகம் இந்தியாவிடம் மீண்டும் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக அந்நாடு விசா பிரச்னைகள் குறித்து இந்தியாவுடன் பேச இருக்கிறது. விசா பிரச்னைகளுக்குப் பிறகே வர்த்தகம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சபாகர் துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகள், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் இருந்துஇயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சபாகர் துறைமுகத்தால் 30 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து செலவு குறைகிறது