பிரஜ்வல் ரேவண்ணா எக்ஸ் தளம்
இந்தியா

தினம் 8 மணி நேரம் வேலை.. ரூ.540 சம்பளம்.. சிறையில் கண்ணீர் வடித்த Ex MP பிரஜ்வல் ரேவண்ணா!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மற்ற சிறைக் கைதிகளைப் போலவே வெள்ளை நிற ஆடை வழங்கப்பட்டுள்ளது.

Prakash J

பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா

பல்வேறு பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கர்நாடகாவின் முன்னாள் எம்பியும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக, பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார். அதேநேரத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். 35 நாட்களுக்குப் (மே 31, 2024) பிறகு அவர் நாடு திரும்பியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா

இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அதாவது, அவர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு வழக்குகளில், வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மட்டும் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதி செய்ததுடன், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமும் 8 மணி நேரம் வேலை.. மாதச் சம்பளம் ரூ.540

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மற்ற சிறைக் கைதிகளைப் போலவே வெள்ளை நிற வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 15528 என்ற சிறைக் கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. தவிர, மற்ற கைதிகள்போல ரேவண்ணாவும் சிறையில் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிறையில் பேக்கரி மற்றும் தையல் வேலை செய்வது உள்ளிட்ட பணிகள் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் செய்து முடித்த பிறகு தச்சு வேலைகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைக்குள் தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்று ரேவண்ணாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா

இந்த வேலைகளுக்காக அவருக்கு மாத சம்பளமாக ரூ.540 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் ரேவண்ணாவின் நாள் காலை 6:30 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்நாள் இரவு சிறையில் கண்ணீர் வடித்த பிரஜ்வல்

மேலும் அவருக்கு ஒருநாளைக்கு மூன்று வேளை வழங்கப்படும் காலை உணவில் காய்கறி புலாவ், தக்காளி பாத், சித்ரான்னா, போஹா, புளியோகரே, உப்மா மற்றும் வாங்கிபாத் ஆகியனவும், மதிய மற்றும் இரவு உணவாக சப்பாத்தி, ராகி உருண்டை, சாம்பார், வெள்ளை அரிசி மற்றும் மோர் ஆகியனவும், மட்டன் மற்றும் கோழி இறைச்சி மாதத்திற்கு இரண்டு முறை பரிமாறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளைப்போலவே, பிரஜ்வலும் வாரத்திற்கு இரண்டு தொலைபேசி அழைப்புகளைச் செய்ய அனுமதிக்கப்படுவார். அவை, ஒவ்வொன்றும் அதிகபட்சம் 10 நிமிடங்கள் நீடிக்கும் என சிறை நிர்வாகம் தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை வெளியிட்டுள்ளது.

prajwal revanna

இதற்கிடையே தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சிறையில் தனது முதல் இரவைக் கழித்தபோது பிரஜ்வல் ரேவண்ணா மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும், கண்ணீர் வடித்ததாகவும் சிறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ”மருத்துவப் பரிசோதனையின்போது அவர் மனமுடைந்து போனார், ஊழியர்களிடம் தனது வேதனையை வெளிப்படுத்தினார்" என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.