முன்னாள் பிரதமரின் பேரன்... Ex MP பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சிறைத் தண்டனை.. வரவேற்ற SIT தலைவர்!
பல்வேறு பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கர்நாடகாவின் முன்னாள் எம்பியும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக, பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மறுபுறம் இது, ரேவண்ணாவின் அரசியல் வாழ்க்கைக்கு ஓர் அடியாக அமைந்ததுடன், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அவர் தோல்வியைச் சந்தித்தார்.
அதேநேரத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். 35 நாட்களுக்குப் (மே 31, 2024) பிறகு அவர் நாடு திரும்பியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என உறுதி செய்தது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு வழக்குகளில், வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை, ஆபாச வீடியோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தலைவர் பி.கே.சிங் வரவேற்றுள்ளார். மேலும், இத்தீர்ப்பை தாமதப்படுத்தவும் தடுக்கவும் ஒவ்வொரு கட்டத்திலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர். மோசமான சமூக-பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர். இதற்கு நேர்மாறாக, குற்றம்சாட்டப்பட்டவர் அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் சக்திவாய்ந்தவர். இருப்பினும், நீதிக்கான தனது விருப்பத்தால் உந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர், ஒரு வருடம் எங்களுடன் உறுதியாக நின்றார். இந்த தண்டனை பிரஜ்வல் ரேவண்ணாவுக்குக் கிடைக்கப் பெற அவர்தான் காரணம். இந்தத் தீர்ப்பு சமூகத்தில் பல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் அமைதியையும் தரும் என்று நான் நம்புகிறேன்" என அவர் கூறியதாக என்.டி.டிவி. ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது.