டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளம்
இந்தியா

”பெங்களூருவை கடவுளாலும் ஒரேநாளில் மாற்ற முடியாது” டி.கே.சிவக்குமார் கருத்துக்கு குவிந்த எதிர்வினை!

பெங்களூருவின் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகளை ஒரே இரவில் தீர்க்க கடவுளால்கூட முடியாது” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையா முதல்வராக உள்ளார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் உள்ளார். இந்த நிலையில், வளர்ச்சியடைந்த நகரமாக மாறியிருக்கும் பெங்களூரு மக்கள் நெருக்கம், வாகன நெரிச்சல், தண்ணீர் பிரச்னை, உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதுகுறித்து அரசுக்கு எதிராகப் பலரும் அவ்வப்போது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், "பெங்களூருவை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மாற்ற முடியாது. கடவுளாலும்கூட அதைச் செய்ய முடியாது. சரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே அதை மாற்ற முடியும்" என துணை முதலவர் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவருடைய இந்தக் கருத்துக்கு பொருளாதார நிபுணரும் ஆரின் கேபிடல் தலைவருமான மோகன்தாஸ் பாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது வலைதளப் பதிவில், “நீங்கள் (டி.கே.சிவகுமார்) எங்கள் அமைச்சராகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வலிமையான அமைச்சராக நாங்கள் உங்களைப் பாராட்டி வரவேற்றோம். ஆனால் எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது. முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் முழுமையடையாமல் உள்ளன. நடைபாதைகள் மோசமான நிலையில் உள்ளன. பொது போக்குவரத்து போதுமானதாக இல்லை” என விமர்சித்துள்ள அவர், 5,000 புதிய மின்சார பேருந்துகளை உடனடியாக வாங்கவும், சாலைப் பணிகள் மற்றும் மெட்ரோ விரிவாகத்தைச் செயல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

டி.கே.சிவக்குமாரின் இந்தக் கருத்தை எதிர்க்கட்சியான பாஜகவும் விமர்சித்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர் மோகன் கிருஷ்ணா, ” ‘பிராண்ட் பெங்களூரு’வை உருவாக்குவேன் என்று சொன்னவர், கடவுளால்கூட இதைச் சரிசெய்ய முடியாது என்று கூறியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிறகு யாரால் முடியும்? கடவுள் ஒரு நபருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ மக்களுக்குச் சேவை செய்ய ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த அரசாங்கம் வளர்ச்சியைத் தவிர வேறு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் திறமையற்றது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டி.கே.சிவக்குமார்

இதற்கிடையே, கர்நாடக தலைநகரின் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் வகையில் சாலைகள் குறித்த கையேட்டை தனது அரசாங்கம் வெளியிட்டிருப்பதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.