அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு திட்டங்கள் மற்றும் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடிகளைச் சேர்ந்தவர்களுக்கு 24 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு 19 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க கர்நாடக காங்கிரஸ் அரசு பரிசீலித்து வருவதாக கடந்த ஆண்டு கூறப்பட்டது. சிறுபான்மை மதத்தவரை திருப்தி படுத்துவதற்கான முயற்சி என்று பாஜகவினர் சர்ச்சை எழுப்பியதை அடுத்து இந்தப் பரிசீலனை கைவிடப்பட்டது. இப்போது அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீட்டை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.