அண்டை மாநிலமான முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசைக் கண்டித்து பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பெண்கள் சிலர் கூட்டத்தில் புகுந்து கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு முழக்கமிட்டவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதைப் பார்த்துக் கோபமடைந்த சித்தராமையா, அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த தார்வாட் கூடுதல் எஸ்பி நாராயண பரமானியை நோக்கி, "ஏய், இங்கே வா, எஸ்பி யார்? நீங்க என்ன பண்றீங்க?" என்று கேட்டு அந்த அதிகாரியை அடிப்பதற்கு கை ஓங்கினார். ஆனால், அப்படியே நிறுத்திக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பொது மேடையில் முதல்வர் சித்தராமையா நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
சித்தராமையாவின் இந்தச் செயல் குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்), "அதிகாரம் நிரந்தரமானது அல்ல" எனப் பதிவிட்டுள்ளது. மேலும் அது, “காவல்துறை அதிகாரியை அடிக்கக் கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுச் சாடியுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத், "ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக உங்கள் கையை உயர்த்திய செயல் மிக உயர்ந்த நிலைக்கு அவமானகரமானது. உங்கள் ஆணவம், கற்பனை செய்யக்கூடிய அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. நீங்கள் நிலைநிறுத்துவதாகச் சத்தியம் செய்த நிறுவனங்களை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத வெளிப்பாடு இது. நீங்கள் அவமானப்படுத்த முயன்ற அதிகாரியிடம் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் தீராத அதிகார மோகம் உங்கள் தீர்ப்பைக் கெடுத்து, உங்கள் பதவியை வெட்கக்கேடான ஆழத்திற்கு இழுத்துச் செல்கிறது. இத்தகைய இழிவான நடத்தை, மாநிலத்தின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஒரு தலைவருக்கு மட்டுமல்ல, எந்தவொரு தலைவருக்கும் முற்றிலும் பொருந்தாது” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான பசனகவுடா ஆர் பாட்டீல், ”காவல்துறை அதிகாரிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த காவல் துறையையும் முதல்வர் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார். தவறுகளுக்காகவும் ஓட்டைகளுக்காகவும் காவல்துறை அதிகாரிகளைத் துன்புறுத்தி, தாக்கும் இத்தகைய மனநிலை மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது. முதல்வர் தனது உணர்ச்சியற்ற நடத்தைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவருமான துணை முதல்வருமான டி.கே.சிவகுமார், கட்சிப் பேரணியில் கறுப்புக் கொடிகள் காட்டியது குறித்து பாஜகவை எச்சரித்துள்ளார். அவர், “நான் உங்களை (பாஜக) எச்சரிக்கிறேன். நீங்கள் நிலைமையை சரிசெய்ய வேண்டும், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக உங்கள் கட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் உங்களுடைய எந்த நிகழ்வும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். எந்த வகையான போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகிவரும் நிலையில், பாகிஸ்தானுடன் 'போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை' என்று சித்தராமையா கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.