ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், வீரர்களுக்கான பாராட்டு விழாவை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது,வீரர்களை காண்பதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் போராடிவந்தனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.45 க்கும் மேற்பட்ட ஆர்சிபி ரசிகர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 18 ஆண்டுகால போராட்டத்தில் கிடைத்த வெற்றியை ஒரு புறம் கொண்டாடிக்கொண்டிருந்த சூழலில், மறுபுறம் ரசிகர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவிக்கும் மக்கள், நிகழ்ச்சிக்கு முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், பெரும் விபத்து நிகழ்ந்ததாகவும், வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை தற்போது நடத்தியிருக்க கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சித்தராமையா, சின்னசாமி மைதானத்தில் 35,000 பேருக்கு மட்டுமே இடமிருக்கும் நிலையில், 2 -3 லட்சம் பேர் கூடியதாகவும், அவ்வளவு பெரிய கூட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கும்பமேளாவில் 50 முதல் 60 பேர் உயிரிழந்ததாகவும், ஆனால் அதை தாம் விமர்சிக்கவில்லை என்றும் இதே போன்ற பிற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி தற்போதைய சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் சித்தராமையா தெரிவித்தார்.
"பெங்களூருவில் நடந்த துயரச் சம்பவம் உண்மையிலேயே மனதை உடைக்கிறது. இந்த துயரச் சம்பவத்தின் போது தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."
”பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்டநெரிசல் காரணமாக ஏற்பட்ட துயரமான சம்பவம் மனதை உடைக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிராத்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில், பெங்களூரு மக்களுடன் நான் நிற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அனைத்து சாத்தியமான ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்க வேண்டும். இந்த சோகம் ஒரு வேதனையான நினைவூட்டல்: எந்த கொண்டாட்டமும் மனித உயிருக்கு முன் மதிப்புக்குரியது அல்ல. பொது நிகழ்வுகளுக்கான ஒவ்வொரு பாதுகாப்பு நெறிமுறையும் மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் .”
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன்." என்று குறிப்பிட்டுள்ளார். கோலியின் மனைவி அனுஷ்காவும் இந்த அறிக்கையை பகிர்ந்ததுடன் உடைந்த இமோஜியை வைத்து பதிவுட்டுள்ளார். நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்சிபி அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.