கர்நாடகா மாநில உணவுபாதுகாப்புத் துறை மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை 15 மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அதன் தரத்தை பூர்த்தி செய்யத் தவறியதற்காக தடை செய்துள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் இந்த மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை கடந்த மே மாதத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் இத்தகைய மருந்துகள் பாதுகாப்பற்றவையாக உறுதிசெய்யப்பட்ட பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் ஊசி போட பயன்படுத்தும் மருந்துகள், சிரப்கள், மாத்திரைகள் மற்றும் கால்நடை தடுப்பூசிகளும் அடங்கும்.. அதன்படி, மைசூருவில் உள்ள அபான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த பாராசிட்டமால் மாத்திரையான போமோல்-650, மைசூருவைச் சேர்ந்த என் ரங்கா ராவ் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் கும்கம் போன்ற மருந்துகளும் அடங்கும்.. மேலும், கூட்டு சோடியம் லாக்டெட் ஊசி ஐ.பி., மிட்கியூ-7 சிரப், ஆல்பா லிபோயிக் அமிலம், பைராசிட் ஓரல் சஸ்பென்ஷன், அயர்ன் சுக்ரோஸ் ஊசி யு.எஸ்.பி போன்ற மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் ஏற்படுத்தக்கூடிய கடுமையான உடல்நல பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு மருந்தாளுநர்கள், மொத்த விற்பனையாளர்கள், மருத்துவர்கள் உட்பட அனைவரையும் இந்த மருந்துகளின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. அடுத்தக்கட்ட அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் வரை, இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இந்த விவகாரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கர்நாடகாவின் மருந்துப் பரிசோதனை ஆய்வகம் (Drugs Testing Laboratory), சில மருந்துகள்/அழகுசாதனப் பொருட்கள் 'நிலையான தரத்தில் இல்லை' என்று கருத்து தெரிவித்துள்ளது. மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் இந்த தயாரிப்புகளை சேமித்து வைப்பது, விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடம் ஏதேனும் இருப்பு இருந்தால், உள்ளூர் மருந்து ஆய்வாளர் அல்லது உதவி மருந்துக் கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாகத் தெரிவிக்கவும். பட்டியலிடப்பட்ட மருந்துகள்/அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.