Mysuru Dasara PublicTV
இந்தியா

மைசூரு தசரா.. தொடங்கிவைத்த எழுத்தாளர் பானு முஷ்டாக்.. முதல்வர் பெருமிதம்!

கர்நாடக மாநிலம் மைசூருவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை புக்கர் பரிசு வென்ற பிரபல எழுத்தாளர் பானு முஷ்டாக் இன்று தொடங்கிவைத்தார்.

Prakash J

கர்நாடக மாநிலம் மைசூருவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை புக்கர் பரிசு வென்ற பிரபல எழுத்தாளர் பானு முஷ்டாக் இன்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், 'நாத ஹப்பா' (மாநில விழா) என்று கொண்டாடப்படும் இந்த தசரா விழாக் கொண்டாட்டங்களை இன்று தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக் மாநில முதல்வரால் அழைக்கப்பட்டிருந்தார். இது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய இவ்விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ”யாரை அழைப்பது என்று முடிவு செய்வது அரசு” எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

சித்தராமையா, பானு முஷ்டாக்

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் புகழ் பெற்ற தசரா பண்டிகையை புக்கர் பரிசு வென்ற பிரபல எழுத்தாளர் பானு முஷ்டாக் இன்று தொடங்கிவைத்தார். சாமுண்டேஸ்வரி சிலை மீது வேத மந்திரங்கள் முழங்க மலர்களை பொழிந்து விழாவை பானு முஷ்டாக் தொடங்கிவைத்தார். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரு ராஜகுடும்பத்தினர் உள்ளிட்டோரும் அருகில் இருந்தனர்.

இவ்விழாவில் பேசிய முதல்வர் சித்தராமையா, “தங்கள் சுயநலத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் வரலாற்றைத் திரிப்பது மன்னிக்க முடியாத குற்றம். தேர்தல்களின்போது நாம் அரசியல் செய்யலாம். ஆனால், ஒரு பிரிவினரைத் திருப்திப்படுத்த, நாம் அரசியல் செய்யக்கூடாது. நமது அரசியலமைப்பு மதச்சார்பின்மையின் மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது சாதி அல்லது மதத்தைப் பார்ப்பதில்லை. அரசியலமைப்பைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் அதை மாற்ற முயல்கிறார்கள். ’சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு முக்கியம்’ என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

எனவே, சர்வதேச புக்கர் பரிசு வென்ற பானு முஷ்டாக் இந்த ஆண்டு மைசூர் தசராவைத் திறந்து வைத்தார் என்பதைச் சொல்வதில் எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. பானு முஷ்டாக் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மனிதர். நாம் ஒருவரையொருவர் மனிதர்களாக மதிக்க வேண்டும், மத வெறுப்பின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் பாகுபாடு காட்டக்கூடாது. நாம் மனிதகுலத்தை ஒன்றாக ஏற்றுக்கொள்கிறோம் என்றால், பானு முஷ்டாக் தசரா விழாவைத் தொடங்கி வைத்ததையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் கர்நாடகாவின் பெரும்பான்மையான மக்கள் அதை முழு மனதுடன் வரவேற்றுள்ளனர்" என்றார்.

விழாவில் பேசிய பானு முஷ்டாக், “தசரா வெறும் பண்டிகை மட்டுமல்ல, இந்த மண்ணின் இதயத்துடிப்பு. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து கலாசாரத்தின் கொண்டாட்டமாக தசராவைக் கொண்டாடுகிறோம். இந்த தசரா பண்டிகை இந்த மாநிலம் மற்றும் நாட்டின் எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீதியின் நெருப்பைப் பற்றவைக்கட்டும். அரசியலமைப்பு மதிப்புகளையும், ஒருவருக்கொருவர் நம்பிக்கை முறைகள் மற்றும் மதிப்புகளையும் மதிப்போம். ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இந்த நிலத்தின் நறுமணமாக இருக்கட்டும். சாமுண்டீஸ்வரி தேவியின் ஆசிகள் நம்மை வழிநடத்தட்டும். அவளுடைய வலிமை, அன்பு மற்றும் தைரியம் நமக்குள் இருக்கும் வெறுப்பு மற்றும் சகிப்பின்மையை வெல்ல நமக்கு உதவட்டும். கலாசாரம் என்பது இதயங்களைப் பாலமாகக் கொண்ட ஒன்று. அது வெறுப்பை அல்ல, அன்பைப் பரப்ப முயல்கிறது.

இந்த நிலம் அனைத்து உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. என் வாழ்க்கை எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. அவற்றில் ஒன்று, நாம் ஒரு தனிநபரிடமிருந்து ஒரு கூட்டுக்கு மாற வேண்டும் என்பது. என் மத நம்பிக்கைகள், என் வாழ்க்கைப் பயணம் அதையே பிரதிபலிக்கின்றன. ஆயுதங்களால் அல்ல, கல்வியால் வாழ்க்கையில் நாம் வெற்றி பெற வேண்டும். வெறுப்பால் அல்ல, அன்பால் வெற்றி பெற வேண்டும். அனைத்துச் சமூகங்களின் அமைதியான தோட்டத்தில் ஒவ்வொரு பூவும் அதன் சொந்த நிறத்துடன் பூக்கட்டும், ஒவ்வொரு பறவையும் அதன் சொந்த இசையில் பாடட்டும், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் சிம்பொனியை உருவாக்கட்டும். ஜனநாயகம் என்பது ஓர் அமைப்பு அல்ல, அது ஒவ்வொரு குரலையும் மதிக்க முற்படும் ஒரு மதிப்பு. அதை மதிக்க வேண்டியது நமது கடமை” எனத் தெரிவித்தார்.