2005 ஆண்டு முதல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நூறு நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் பெயரை மாற்றி இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்யவிருப்பதாக கூறி மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பதாக மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதையடுத்து, மத்திய அரசு இத்திட்டத்திற்கான நிதி வழங்காத நிலையில், மாநிலத்தின் சொந்த நிதியைக் கொண்டு 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு வேலை வழங்க மாநில அரசு 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் பெயரை ”மகாத்மா காந்தி கர்மஸ்ரீ பிரகல்ப” எனப் பெயர் மாற்றம் செய்வதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டுவதன் மூலம், மத்திய அரசின் திட்டத்திற்குப் போட்டியாகவும், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், "மத்திய அரசு மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் ஏழைத் தொழிலாளர்களைக் கைவிட மாட்டோம். அதனால்தான் காந்தியின் பெயரை இந்தத் திட்டத்திற்குச் சூட்டியுள்ளோம்," என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.