கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கக் கட்டிகளை கடத்தி வரும் குருவி போல் நடிகை ரன்யா ராவ் செயல்பட்டு வந்ததும், ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்து கொடுத்தால் அவருக்கு 5 லட்சம் ரூபாயை கடத்தல் கும்பல் கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தங்கத்தை கடத்தி வரும்போதெல்லாம் ஏடிஜிபியின் மகள் எனக் கூறி விமான நிலைய சோதனையில் இருந்து நடிகை ரன்யா ராவ் தப்பித்து வந்ததாகவும், இந்த முறை வசமாக சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே விசாரணையில் அவர் ஒரு வருடத்தில் துபாய்க்கு மட்டும் 27 முறை பயணம் செய்ததாகவும் தெரிய வந்தது.
நடிகை ரன்யா ராவ் தற்போது வருவாய் அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், 17 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தவிர, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், துபாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், போதுமான ஓய்வு கிடைக்காததால் தற்போது நான் சோர்வாக இருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் தனது குடும்பம் பற்றிய தகவல்களையும் தெரிவித்துள்ளார்.