மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். சிவசேனா கட்சியினர் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவைச் சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது. எனினும், இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கம்ராவுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா களத்தில் இறங்கியுள்ளது. அதேநேரத்தில், இதுதொடர்பாக ”நகைச்சுவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் ஒரு உயர்மட்ட தலைவரை வேண்டுமென்றே அவமதித்து அவதூறு செய்ய முயற்சித்தால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது. குணால் கம்ரா மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். என்றாலும், “என் கருத்துகளுக்காக வருத்தப்படவில்லை. ஒருவேளை நீதிமன்றம் அறிவுறுத்தினால் மன்னிப்பு கேட்கிறேன்” என காவல் துறையிடம் குணால் கம்ரா தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, அவரை சிவசேனா ஆதரவாளர்கள் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோ, கட்டட சட்ட மீறலைக் கட்டியிருப்பதாகக் கூறி, தொடர்ந்து இடிப்புப் பணியும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தவிர, ஏக்நாத் ஷிண்டேவைத் தாக்கிப் பேச, குணால் கம்ரா வேறு யாரிடமாவது பணம் வாங்கினாரா அல்லது வேறு ஏதேனும் சதி இருக்கிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக குணால் கம்ராவின் பெற்றோர் தங்கியுள்ள மும்பை வீட்டிற்கு கார் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார், சம்மனுடன் சென்று, அவர் மீதான வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வலியுறுத்தியுள்ளனர். குணால் கம்ரா தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதால், அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குணால் கம்ரா நகைச்சுவை செய்ததை பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “குணால் கம்ராவின் தகுதிகள் என்ன? வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாத இவர்கள் யார்? நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் துஷ்பிரயேகம் செய்கிறார்கள். நமது மத நூல்களை கேலி செய்கிறார்கள். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளைப் பற்றி கேலி செய்கிறார்கள். அவர்கள் தங்களை செல்வாக்கு செலுத்துபவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இரண்டு நிமிட புகழுக்காக இதைச் செய்கிறார்கள்.
நமது சமூகம் எங்கே செல்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஒருவரை அவமதிப்பது தவறு. மரியாதைக்குரிய ஒரு மனிதரை நகைச்சுவை என்ற பெயரில் அவமதிக்கிறீர்கள். நீங்கள் அவரது பதவியை தவறாகச் சித்திரிக்கிறீர்கள். ஒருவரை அவரது தாழ்மையான பின்னணிக்காக அவமரியாதை செய்வது சரியல்ல. மக்கள் தங்கள் செயல்களுக்கும் பேச்சுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். உத்தவ் தாக்கரே ஆட்சியின்போது எனக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது சட்டவிரோதம். ஆனால், இது சட்டப்பூர்வமானது. என்றாலும், அந்தச் சம்பவத்தை இதனுடன் இணைக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
2020 செப்டம்பர் மாதம், உத்தவ் தாக்கரே ஆட்சியின்போது மும்பையின் பாலி ஹில்லில் உள்ள கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தின் ஒரு பகுதியை, ஆக்கிரமிப்பு காரணமாக பிரஹன் மும்பை மாநகராட்சி இடித்தது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அதிர்ச்சியூட்டும் மரணத்திற்குப் பிறகு, கங்கனாவுக்கும் சிவசேனா தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகரத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகக் கூறி, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டார். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது கங்கனா பாஜகவில் இணையவில்லை. தவிர சிவசேனா பிளவுபடவும் இல்லை.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சிகளுக்கு இடம் வழங்கும் எந்தவொரு ஸ்டுடியோவும் அதன் வளாகத்தில் ஏதேனும் சட்டவிரோத கட்டுமானம் கண்டறியப்பட்டால் புல்டோசர் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று பாஜக எம்எல்ஏ ராம் கதம் எச்சரித்துள்ளார்.