செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் பேசிய கன்னட மொழி குறித்த கருத்து விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து இவரது பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கன்னடவே சத்திய, கன்னடவே நித்திய என்பது கன்னடர்களின் முழக்கம் மட்டுமல்ல, கன்னடத்தின் தாயான புவனேஸ்வரி தேவியிடம் கன்னடர்கள் கொண்டுள்ள தீட்சையும் கூட. கன்னடம் எந்த குறிப்பிட்ட மொழியிலிருந்தும் தோன்றவில்லை என்பதை பல மூத்த மொழி வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர்
அமைதி, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை தேவையில்லாமல் சீர்குலைக்கும் அவரது நடத்தை சரியல்ல. அவரது வெளிப்பாட்டின் சூட்டில், கோடிக்கணக்கான கன்னடர்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளார், மேலும் அவர் கன்னட மற்றும் கன்னடர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்பதன் மூலம் யாரும் சிறியவர்களாகி விடுவதில்லை, ஆணவத்தால் யாரும் பெரியவர்களாகி விடுவதில்லை. வரலாறு அல்லது மொழியியலில் நிபுணராக இல்லாத கமல்ஹாசன், கன்னட மொழி குறித்து உணர்ச்சியற்ற முறையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதிவிட்டுள்ளார்.