நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இணையத்தில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி (CJP) கடந்த 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்த கரப்பான் பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தசூழலில் தான், நேற்றைய முன்தினம், சோனம் வாங்சுக்-ஐ டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக மருத்துவமனை அழைத்து சென்றது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களையும் களைத்திருந்தது. எனினும், திட்டமிட்டபடி, நாடாளுமன்ற முற்றுகை நடைபெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் முயற்சி செய்ததனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. நுழைவாயில்கள் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நுழைவாயிலுக்கு வெளியே பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
சில இடங்களில் கல்வீச்சு, தடியடி மற்றும் ஒரு சில இடங்களில் கண்ணீர் புகை வீச்சு ஆகிய நடவடிக்கைகளும் புதுடெல்லி பகுதியில் பொதுமக்களுக்கு சிரமங்களை உண்டாக்கின. இந்தசூழலில் தான், கரப்பான் பூச்சி கட்சியினரை பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுத்தது மத்திய அரசு. அதன்படி, தற்போது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இல்லத்தில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்தித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
அப்போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், உயர்கல்வித்துறையில் சீர்த்திருத்தங்கள் நடத்த வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.