\
Delhi Police remove Sonam Wangchuk from Jantar Mantar
சோனம் வாங்சுக்Pt web

சோனம் வாங்க்சுக்-ஐ தூக்கிய போலீஸ்.. மெகா திட்டம் போட்ட டெல்லி.. முடிவுக்கு வந்த உண்ணாவிரதம்!

நாடாளுமன்ற முற்றுகைக்கு முன்பாகவே, இன்று சோனம் வாங்சுக் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் காவல் துறை திட்டமிட்டே செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இணையத்தில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி (CJP) கடந்த 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் பங்கேற்றுள்ளார். அவரது, போராட்டம் இன்றுடன் 21-ஆவது நாளை எட்டியிருந்தது. இதற்கிடையே அவருடைய மருத்துவப் பரிசோதனையில், அவர் 9 கிலோ வரை எடை குறைந்திருப்பதாகவும், உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Sonam Wangchuk
Sonam Wangchukweb

எனினும், சோனம் வாங்சுக் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்து வந்தார். தொடர்ந்து, ஜூலை 20 நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அதை முற்றுகையிட தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தச் சூழலில் தான், சோனம் வாங்சுக்கிற்கு உரிய மருத்துவ பரிசோதனை அளிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதைக் கருத்தில்கொண்டு, நாடாளுமன்ற முற்றுகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், இன்று சோனம் வாங்சுக் டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

இதன் பின்னணியில் காவல் துறை திட்டமிட்டே செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல்களின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் பதவியேற்ற உடனேயே நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த நடவடிக்கைக்கான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் காலை நேரத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மூத்த அதிகாரிகள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

delhi
delhiPTI

அதற்காக, வாங்சுக்கின் நெருங்கிய கூட்டாளியான அபிஜீத் திப்கே வெளியே சென்ற நேரத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, இன்ஸ்பெக்டர் பதவிக்குக் கீழுள்ள உள்ளூர் காவல் துறையினர் மற்றும் சிறப்புப் படையினர் என 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அவர்களுக்கு இதுகுறித்து எந்த அறிவிப்புகளையும் முன்கூட்டியே கூறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், நிபுணர் மருத்துவ ஆலோசனையின் பேரிலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் வாங்சுக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com