இந்தியா

ரஃபியா கொலை விவகாரம்: குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் - ஜோதிமணி காட்டம்

JustinDurai
'பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
டெல்லியில் ரஃபியா சைஃபி என்ற பெண் காவல் அதிகாரி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் #JusticeForRabiya என்ற ஹேஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ரஃபியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோதிமணி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி. கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது. இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார். அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பக் கல்வி முதலே பெண்கள் சமத்துவம், மரியாதை, பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும். சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.