[X] Close

'மேட்ரிமோனி' வலைதளங்கள் மூலம் பண மோசடிகளை அரங்கேற்றி வந்த கும்பல் கைது

குற்றம்

2-arrested-for-staged-money-laundering-through-fake-matrimonial-websites
மேட்ரிமோனி வலைதளங்கள் மூலம் பண மோசடிகளை அரங்கேற்றி வந்த நைஜீரிய கும்பல் காவல்துறையிடம் சிக்கியுள்ளது. விசாரணையில், விவாகரத்தான ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பண மோசடியை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விவகாரத்தான பெண்ணொருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அப்போது மேட்ரிமோனி மூலம் அப்பெண்ணை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனது பெயர் விஜய் எனவும், தான் நெதர்லாந்தில் மருத்துவராக பணிபுரிவதாகவும், அதை நம்பவைக்க தான் ஆப்ரேஷன் செய்வது போன்ற புகைப்படங்களையும் அந்த பெண்ணின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். மேலும் தனக்கும் விவாகரத்தானதால் திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேடி வருவதாகக் கூறி பெரம்பூரைச் சேர்ந்த இப்பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.
நட்பாகத் தொடங்கிய பழக்கம், நாளடைவில் காதலாக மாறி இருவரும் செல்போனில் தினமும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் லேப்டாப் பரிசு ஒன்றை அப்பெண்ணுக்காக சென்னைக்கு அனுப்பியிருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து கொரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகக் கூறி உங்களுக்கு பார்சல் வந்துள்ளது எனவும், பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி தொகை 30 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு பொருளைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி அப்பெண்ணும் வங்கிக் கணக்கு மூலமாக பணம் அனுப்பியுள்ளார். பின்னும் லேப்டாப் வந்து சேரவில்லை. 
image
இதேபோல் பலமுறை வைர மோதிரம், தங்க நகை மற்றும் நெதர்லாந்து நாட்டின் பணமாக 1 கோடி பரிசில் வந்திருப்பதாகவும் அதை அனுப்பி வைத்திருப்பதாகவும் தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி சென்னை பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் அந்நபர். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் மேட்ரிமோனி நிறுவனத்தை அணுகி கேட்டபோது, அது மோசடி கும்பலின் செயல் என தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரை அணுகி தன்னை ஏமாற்றி சுமார் 4.15 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையின்போது, இதே பாணியில் விவகாரத்தான ஆண்கள் மற்றும் பெண்கள் என, கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள்தான் இதைச் செய்துள்ளனர் என்பதை உணர்ந்த போலீசார், அந்த மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பிய அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு பிரபல வங்கியில் கணக்கு தொடங்கி அதன் மூலமாக பணபரிவர்த்தனைகள் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் போலியாக உருவாக்கப்பட்ட மேட்ரிமோனி வெப்சைட்டை பயன்படுத்தியே பாதிக்கப்பட்ட விவாகரத்தான் ஆண்கள் மற்றும் பெண்களை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அணுகியுள்ளதுனர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 
image
இதனையடுத்து அந்த கும்பல் பேச பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, அதன் டவர் லொக்கேஷன் டெல்லி பகுதியில் காண்பித்துள்ளது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஆப்ரேஷன்-டி என்ற பெயரில் தனிப்படை ஒன்றை அமைத்து டெல்லி உத்தம் மாவட்டத்திலுள்ள துவாரகா பகுதிக்கு விரைந்தனர். பின்னர் செல்போன் டவர் காண்பித்த குடியிருப்பில் சென்று விசாரித்தபோது அந்த குடியிருப்பு முழுவதுமே நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கி இருந்த்தால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்போன் எண்ணை வைத்து குடியிருப்பில் பதுங்கியிருந்த 2 நைஜீரியர்களை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ (31) மற்றும் சிலிடஸ் கேஸ்சுக்வு (23) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் தங்களின் மோசடிச் செயலுக்கு "கிப்ட் ஸ்கேம்" எனப் பெயர் வைத்ததும், மேட்ரிமோனி வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதில் விவாகாரத்தாகி மறுமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்ணின் விவரங்களை எடுத்து அவர்களின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு மருத்துவர்போல் நடித்து பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களின் கூட்டாளிகளான ஒரு பெண் உட்பட இருவர் தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 15 செல்போன்கள், 4.30 லட்சம் ரூபாய் பணம், 15 ஏ.டி.எம் கார்டுகள், லேப்டாப் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
image
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரு நைஜீரியர்களை துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்டு பெற்று தனிப்படை போலீசார் சென்னை அழைத்துவந்து மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவ்விருவரும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முகம் தெரியாமல் இணைய வழியில் நம்பவைத்துப் பணம் பறிக்கும் கும்பல்களிடம் விழிப்புடன் இருக்க பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
[X] Close