எம்.பி கமல்ஹாசன் Pt web
இந்தியா

அணுசக்தி மசோதா | மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்.. பதில் அளித்த இணையமைச்சர்!

மாநிலங்களவையில் அணுசக்தி குறித்தான எம்.பி கமல்ஹாசன் கேள்விக்கு, பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.

PT WEB

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிசம்பர் 19) ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், இந்தியாவின் அணுசக்தித் திறன் மற்றும் தோரியம் இருப்பு பயன்பாடு குறித்து மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமரின் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.

அதில், 'விக்சித் பாரத் 2047' திட்டத்தின்கீழ், இந்தியாவின் அணுசக்தித் திறனை 2047-ஆம் ஆண்டிற்குள் 100 GW ஆக உயர்த்த அரசு விரிவான சாலை வரைபடத்தைத் தயாரித்துள்ளது. தற்போதுள்ள அணுசக்தி உற்பத்தித் திறனை 2031-32ஆம் நிதியாண்டிற்குள் 22 GW ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 100 GW இலக்கில், இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) மட்டும் 54 GW பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் யுரேனியம் குறைவாகவும், தோரியம் அதிக அளவிலும் உள்ளது. இந்தத் தோரியத்தை எரிசக்தியாக மாற்ற 'மூன்று அடுக்கு அணுசக்தித் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் எரிசக்தி சுதந்திரத்தையும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான தேவையையும் குறைக்க முடியும்.

கல்பாக்கத்தில் 500 MWe திறன் கொண்ட 'மாதிரி வேகப் பெருக்கி உலை' அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும், அங்கு தலா 500 MWe திறன் கொண்ட இரண்டு புதிய அணு உலைகளை (FBR 1&2) அமைப்பதற்கான முன்-திட்ட பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாடாளுமன்றம்

இந்தத் திட்டங்களுக்காகச் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆய்வுகள் நடத்தப்படும். மேலும், 'சமூகப் பொறுப்புத் திட்டம்' (CSR) மூலம் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெறவும், மாணவர்களுக்கு அணுசக்தி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.