ஜவஹர்லால் நேரு Chat Gpt
இந்தியா

நேரு எதையும் மறைக்கவில்லை., ஜின்னாவின் மதவாதம் குறித்து காந்திக்கு கடிதம் எழுதிய நேரு.!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களின் ஒரு பகுதி இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் நேருவைப் பற்றி கிடைக்கும் சித்திரம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்கள் சுமார் 42 தொகுதிகளில் 75000 பக்கங்களுக்கு விரிகிறது. இந்தத் தொகுப்பில் நேரு தொடர்பான 35,000க்கு மேற்பட்ட ஆவணங்களும் 3,000 புகைப்படங்களும் உள்ளன. “நேரு எதையும் மறைக்கவில்லை” என்பதே இந்த ஆவணங்களை வாசிக்கும்போது கிடைக்கும் மாபெரும் உண்மை” என்கிறார் வரலாற்றுப் பேராசிரியர் மாதவன் கே.பாலட். நேருவின் அன்றாட நாட்குறிப்புப் பதிவுகள், கடிதங்கள் மற்றும் உரைகள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்பாசியராக செயல்பட்டவர் பாலட். இப்போது இந்த ஆவணங்களின் ஒரு பகுதி இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு

இந்த ஆவணத் தொகுப்பில் 1931இல் மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில் முகமது அலி ஜின்னாவின் மதவாத சிந்தனை மற்றும் குறுகலான பார்வை குறித்து சீற்றத்துடன் பதிவு செய்கிறார் நேரு. 1949இல் பாபர் மசூதிக்குள் ராமர் சிலைகள் வைக்கப்பட்டபோது அன்றைய உத்தர பிரதேச மாநில முதல்வருக்க எழுதிய கடிதத்தில் அந்நிகழ்வின் கொடிய விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார். காஷ்மீர் விவகாரம் குறித்து சர்தார் வல்லபாய் படேலுடன் அவர் நிகழ்த்திய கடித உரையாடல்களும் இந்த ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகிறார் பாலட்.

மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதை நேரு தொடக்கத்தில் ஆதரிக்கவில்லை என்கிறார் பாலட். இந்திய பாகிஸ்தான் பிரிவினை அவருக்கு இது குறித்த தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், மொழிவாரி மாநிலக் கோரிக்கைக்கு மக்களிடையே இருந்த ஆதரவைப் புரிந்துகொண்டு ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அவர் மொழிவாரி மாநிலப் பகுப்பை ஏற்றுக்கொண்டார். அதோடு, மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதே தேச ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் என்பதையும் புரிந்துகொண்டார்.

ஜவஹர்லால் நேரு

சீக்கியர்களின் பஞ்சாப் தனிமாநிலக் கோரிக்கையை மட்டுமே அவர் ஏற்கவில்லை. ஏனென்றால் அதை அவர் மதவாதம் சார்ந்ததாகப் பார்த்தார். இந்திரா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரைப்போல் நேரு துணிச்சலான முடிவுகளை எடுக்கவில்லை என்று விமர்சிப்பது முற்றிலும் தவறான பார்வை என்கிறார் பாலட். நேரு நினைத்திருந்தால் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். ஜனநாயகத்தின் குறைகளுக்கு மருந்து அதிகப்படியான ஜனநாயகம்தான் என்பதில் நேரு உறுதியாக இருந்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் மாதவன் கே.பாலட்.