
2025ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
வழக்கமாக தெருக்கள் அளவில் மட்டுமே இருக்கும் தெரு நாய் பிரச்னை இந்தாண்டு தேசிய பிரச்னையாகவே மாறியது. நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் கூட இது பேசப்பட்டது. நாய்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடு தழுவிய விவாதமே நடைபெற்றது
இந்தியாவில் மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றான புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்தன. எதிர்க்கட்சிகள் கொடுத்த கடும் நெருக்கடிக்கு இடையில் சாதி வாரிக்கணக்கெடுப்பு நடத்த அரசு ஒப்புதல் அளித்தது. சிறைத்தண்டனை பெற்ற பிரதமர், முதல்வர், அமைச்சர்களை தகுதி நீக்க கொண்டு வரப்பட்ட மசோதாவும் பேசுபொருளானது.
2025இல் இந்தியாவில் அதிக பிரபலமான வார்த்தையாக மாறியது ஓட் சோரி. பல்வேறு மாநில தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக முறைகேடு செய்து வென்றதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்கள் என ஏராளமான ஆவணங்களையும் மக்கள் முன் வைத்தார். ஆனால் இவற்றை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதே போல எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியும் விவாதப்பொருளானது.
கூட்ட நெரிசல் மிகுந்த இடங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை விபத்துகள் உணர்த்தின. கும்பமேளாவில் 30 பேர், டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர், பெங்களூரு ஐபிஎல் கொண்டாட்டத்தில் 11 பேர், கரூர் தவெக கட்சி நிகழ்ச்சியில் 41 பேர், திருப்பதியில் 9 பேர், கோவா கோயிலில் 7 பேர், ஹரித்வார் மானசா தேவி கோயிலில் 6 பேர் என கூட்ட நெரிசல் மரணங்கள் பதறவைப்பதாக இருந்தன.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆம் ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48, ஆம்ஆத்மி 22 இடங்களில் வென்றன. ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றார். நவம்பரில் நடந்த பிஹார் தேர்தலில் என்டிஏ கூட்டணி மீண்டும் வென்றது. மொத்தமுள்ள 242 இடங்களில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வெற்றிபெற்றது. நிதிஷ் குமார் 10ஆவது முறையாக பிஹார் முதல்வராக பதவியேற்றார்.
2025இல் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு முக்கியமான தேர்தல் நடைபெற்றது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல் நிலை சரியில்லை எனக்கூறி திடீரென ராஜிநாமா செய்தார். இம்முடிவுக்கு பின் அரசியல் அழுத்தங்கள் இருந்ததாகவும் சர்ச்சைகளும் எழுந்தன. இதன் பின் நடந்த தேர்தலில் இண்டியா கூட்டணியின் சுதர்சன் ரெட்டியை வீழ்த்தி என்டிஏ கூட்டணியின் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று துணை ஜனாதிபதி ஆனார்.
ஜூன் 12ஆம் தேதி இந்திய விமானத்துறை வரலாற்றில் கறுப்பு நாளாக அமைந்தது. அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததில் ஒரே ஒருவர் தவிர உள்ள இருந்த 242 பேரும் இறந்தனர். விமானம் விழுந்த கட்டடத்தில் இருந்த 30 பேரும் பரிதாபமாக இறந்தனர். விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் அணைந்ததால் இன்ஜினுக்கு ஆற்றல் கிடைக்காமல் செயலிழந்து கீழே விழுந்ததாக முதல் கட்ட விசாரணை முடிவுகள் தெரிவித்தன
நவம்பர் 10ஆம் தேதி மாலை தலைநகர் டெல்லி பெரும் பதற்றத்தில் ஆழ்ந்தது. இந்திய ஆட்சி பீடத்தின் பிரதான இடங்களில் ஒன்றான செங்கோட்டைக்கு அருகே கார் குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். காஷ்மீர் மருத்துவர் உமர் முகமது என்பவர் குண்டுவெடித்த காரை ஓட்டி வந்தார் என டெல்லி காவல் துறை கூறியது. இது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை 8 பேரை கைது செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மனிதக்கூடுகை என சாதனை படைத்த பிரயாக் ராஜ் கும்பமேளா பிரயாக் ராஜில் நடைபெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற விழாவில் 66 கோடி பேர் புனித நீராடினர். 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சிறிய நகரமே பிரயாக் ராஜில் அமைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தூதர்கள் என பலர் நீராடினர்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தின. காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக இத்தாக்குதலை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்திய விமானங்கள் குறிவைத்து அழித்தன. பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 நாள் நடந்த இந்த போர் இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசியில் பேசிய நிலையில் முடிவுக்கு வந்தது.