ஜம்மு - காஷ்மீரில், காங்கிரஸ் கட்சியின் ஒரு முக்கிய முகமாக அறியப்பட்டவர் குலாம் நபி ஆசாத். இவர், ஜம்மு - காஷ்மீரின் முதல்வராகவும் இருந்தவர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2022, ஆகஸ்ட் மாதம் அக்கட்சியை விட்டு விலகினார். பிறகு ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசாத் கட்சியும் போட்டியிட்டது. ஆனால் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் அக்கட்சியால் ஓர் இடத்தைக்கூட வெல்ல முடியவில்லை. இதனால் ஆசாத்தின் கட்சியின் பல தலைவர்கள் காங்கிரஸில் மீண்டும் சேர கட்சியைவிட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனது கட்சியின் அனைத்து குழுக்களையும் கலைத்துள்ளார். இதுகுறித்து குலாம் நபி ஆசாத்தின் செயலர் பஷீர் ஆரிஃப், ”ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் அனைத்து மாநில, மாகாண, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான குழுக்களையும் அதன் தலைவர் கலைத்துள்ளார். தலைமை செய்தித் தொடர்பாளர் மற்றும் பிற செய்தித் தொடர்பாளர்கள் பதவிகளையும் கலைத்துள்ளார். மறுசீரமைப்பு சரியான நேரத்தில் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.