குலாம் நபி ஆசாத் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
காஷ்மீர் செல்ல அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் அங்குள்ள நிலவரங்கள் குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதிக்க ஸ்ரீநகர் சென்றிருந்தார். விமான நிலையத்தில் இறங்கியதுமே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
தனது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அவர் காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கிய நீதிமன்றம் ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, ஆனந்தநாக் ஆகிய பகுதிகளுக்கு அவர் செல்லலாம் என்றும் ஆனால் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ’தேவை ஏற்பட்டால், நானே காஷ்மீர் சென்று ஆய்வு மேற்கொள்வேன்’ என்றார்.