jammu kashmir x page
இந்தியா

ஜம்மு காஷ்மீர் | ரம்ஜான் மாதத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ.. எழுந்த எதிர்ப்பு!

ஜம்மு காஷ்மீரில் ரமலான் நோன்பு மாதத்தில் நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவில் ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Prakash J

இஸ்லாம் மதத்தினரின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் தற்போது கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் அவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாகத் தொடங்கி, சூரிய மறைவு வரை உண்ணாமல், பருகாமல், குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், தவறான எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நோன்பு இருப்பர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆண்களும் பெண்களும் அரை நிர்வாணமாகக் கலந்து கொண்டிருப்பது விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது. மேலும், இது மாநிலத்தின் கலாசார விழுமியங்களை அழித்ததாக விமர்சகர்கள் வாதிட்டனர்.

இதுதொடர்பாக ஸ்ரீநகரின் ஜமா மசூதியின் தலைமை இமாமும் பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டின் தலைவருமான உமர் பாரூக், ”இது அருவருப்பானது. சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் ஆபாசமாக நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. புனித ரம்ஜான் மாதத்தில் குல்மார்க்கில் ஓர் ஆபாசமான ஃபேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சூஃபி, துறவி கலாசாரம் மற்றும் மக்களின் ஆழ்ந்த மதக் கண்ணோட்டத்திற்கு பெயர் பெற்ற பள்ளத்தாக்கில் இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்" என அவர் சாடியுள்ளார்.

சமூக ஆர்வலர் ராஜா முசாபர் பட், ”புனித ரம்ஜானில் குல்மார்க்கில் நடந்த இந்த நிர்வாண பேஷன் ஷோவை யார் அனுமதித்தார்கள்? அரை நிர்வாண ஆண்களும் பெண்களும் பனியில் நடந்து செல்கிறார்கள். எங்கள் தார்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் மத விழுமியங்களை நீங்கள் ஏன் சாகடிக்க வேண்டும்? இந்த நிகழ்வு காஷ்மீரின் தார்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகளை தகர்க்கும் முயற்சி” என அவர் விமர்சித்துள்ளார்.

உமர் அப்துல்லா

இதையடுத்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை கோரியுள்ள மாநில முதவர் உமர் அப்துல்லா, நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவர், “அதிர்ச்சியும் கோபமும் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கவை. அதுவும் இந்த புனித மாதத்தில், நான் பார்த்த படங்கள் உள்ளூர் மக்களின் உணர்வுகளை முழுமையாக புறக்கணிப்பதைக் காட்டுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.