தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன் பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கொண்டு காணொளி காட்சி வாயிலாக, “பிரதம மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் ரூ.10,000 இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி பொதுமக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், கர்நாடக மாநிலத்தின் 'கிரஹலட்சுமி திட்டம்' மற்றும் பீகாரில் பிரதமர் மோடி அறிவித்துள்ள 'ஒரு முறை நிதி உதவி' திட்டம் ஆகியவற்றை ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் "கர்நாடக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக 'கிரஹலட்சுமி திட்டம்' மூலம் 1.3 கோடிப் பெண்களுக்கு மாதம் ₹2,000 வழங்கி வருகிறது. இதனைப் பிரதமர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், இப்போது, தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, பீகார் பெண்களுக்காக ஒரு முறை நிதி உதவியை பிரதமர் அறிவித்துள்ளார். வாக்கைத் திருடுவதோடு மட்டுமல்லாமல், இப்போது பிரதமர் 'ஓட்டுக்கு இலவசங்களை' விநியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
இது வெளிப்படையாகத் 'தவிர்க்க முடியாத விரக்தி' காரணமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். இதை பீகார் பெண்கள் நன்றாகப் புரிந்துகொள்வார்கள். பீகார் அரசாங்கத்தின் கவுண்ட்டவுன் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. நிதீஷ் குமார் இப்போது ஒரு பழைய கதையாகிவிட்டார் - தேர்தல் முடிவுகள் வரும்போது, பிரதமர் மோடியும் ஒரு பழைய கதையாகிவிடுவார்." எனப் பதிவிட்டுள்ளார்.