நீண்ட இடைவெளிக்குப் பிறகு போபாலில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஜெகதீப் தன்கர் தனது தனித்துவமான பாணியில் பேசியுள்ளார்.
நாட்டின், 14வது துணைக் குடியரசுத் தலைவராக 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை இறுதியில், உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். பின்னர், துணைக் குடியரசுத் தலைவராகவும் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதற்கிடையே, ஜெகதீப் தன்கர் பொது விழாவில் கலந்துகொள்ளாதது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. இதற்கிடையே, சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்புக்குப் பிறகு அவர் முதன்முறையாக பொது விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு போபாலில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் தனது தனித்துவமான பாணியில் பேசியுள்ளார். போபாலில் நடைபெற்ற, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “சில சமயங்களில் அமைதியாக இருப்பது நல்லது என்றும், நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசுவதற்குத் தான் தயங்கக் கூடாது எனவும் தெரிவித்தார். எந்தவொரு கதைப் பின்னலுக்குள்ளும், யாரும் சிக்கிவிடக் கூடாது; அப்படி சிக்கிவிட்டால், வெளியே வருவது மிகவும் கடினம்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பரந்த சமூக சவால்களைப் பற்றி சிந்தித்துப் பேசிய தன்கர், இன்று சிலர் ஒழுக்கம், ஆன்மீகம் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றிலிருந்து விலகிச் சென்று வருவதை எடுத்துரைத்தார். அதுபோல் தகவல் தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளின் வளர்ச்சி குறித்தும் பேசினார். தொடர்ந்து அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவருடைய விமானப் பயணத்திற்கு நேரம் ஆகிவிட்டத்தை ஒருவர் குறிப்பால் உணர்த்தினார். அதைக் கேட்டுப் பேசிய தன்கர், "விமானம் பிடிப்பதற்காக என் கடமையைத் தவிர்க்க முடியாது, நண்பர்களே... எனது சமீபத்திய கடந்தகாலம் அதற்குச் சான்றாகும்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
மறுபக்கம், பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச அரசிலிருந்தோ அல்லது மாநில பாஜகவிலிருந்தோ யாரும் விமான நிலையத்தில் தன்கரை வரவேற்க வரவில்லை. பாஜகவின் இந்தச் செயலை காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. முன்னாள் துணை குடியரசுத் தலைவரின் நெறிமுறையை பாஜக பின்பற்றவில்லை என்று முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.