விலகிய ஜெகதீப் தன்கர்... அடுத்து நடக்க போவது என்ன?
குடியரசுத் துணைத் தலைவர் பதவி இந்திய அரசின் அதிகார படிநிலையில் 2ஆவது பெரிய பதவி. அப்பதவி காலியாகிவிட்டால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அந்தப் பதவிக்கான இடம் நிரப்பப்பட வேண்டும் என அரசமைப்பு சட்டம் கூறுகிறது.
எனினும் புதிய நபர் தேர்வாகும் வரை யார் குடியரசுத் துணைத் தலைவர் யார் பொறுப்பை கவனிப்பார் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. எனினும், குடியரசுத் துணைத் தலைவர் இல்லாத பட்சத்தில் மாநிலங்களவை துணைத் தலைவரே மாநிலங்களவை தலைவர் பொறுப்பையும் கவனிக்கலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த சில காலத்திற்கு ஹரிவன்ஷ் நாராயண் சிங் அப்பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிகிறது. குடியரசுத் துணைத் தலைவர் பதவியை நிரப்ப விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்கர் 2 ஆண்டுகள் பதவி வகித்தாலும் புதிதாக தேர்வாகுபவர் 5 ஆண்டுகள் பதவி வகிக்க முடியும். 2022இல் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 75% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட மார்கரெட் ஆல்வா 25% வாக்குகளை மட்டுமே பெற்றார். இத்தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.