“மேற்கு வங்கத்தின் திகா நகரத்தில் அமைந்துள்ள ஜகந்நாதர் கோயிலை ஜகந்நாத் தாம் (Jagannath Dham) என்று அழைத்தால், மேற்கு வங்க அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒடிசா அரசு கூறியுள்ளது.
ஒடிசாவின் பூரி நகரில் பிரசித்தி பெற்ற ஜகநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் திகா நகரத்தில் ஜகந்நாதர் கோயில் அண்மையில் கட்டப்பட்டது. இதையொட்டி ஒடிசா, மேற்கு வங்க அரசுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. பத்ரிநாத், துவாரகை, ராமேஸ்வரம் மற்றும் புரி ஜகந்நாதர் கோயில்கள் மட்டுமே 'தாம்' (Dham) என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் திகா ஜகந்நாதர் கோயிலை தாம் என்று அழைப்பது பக்தர்களை புண்படுத்தியிருப்பதாகவும் ஒடிசா மாநில சட்ட அமைச்சர் பிரிதிவிராஜ் ஹரிச்சந்திரன் கூறியுள்ளார்.
ஒடிசாவை ஆளும் பாஜக அரசு பொறாமையை வெளிப்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஒடிசா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்கள் தாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.