isro ANI
இந்தியா

’Eye in the Sky’ விண்வெளியில் மீண்டும் வரலாறு படைத்த ISRO.. 2,367 கிலோ செயற்கைக்கோளின் பயணம்!

விண்வெளி ஆராய்ச்சியில் மீண்டும் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறது ISRO!

PT WEB

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது, விண்வெளி ஆராய்ச்சியில் மீண்டும் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறது ISRO! ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இன்று அதிகாலை இந்தியாவின் முதல் பிரத்யேக Geo-orbit imaging satellite ஆன EOS-05 செயற்கைக்கோளை, GSLV-F17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி புதிய சாதனையை படைத்திருக்கிறது.

ISRO

விண்ணில் பாய்ந்த GSLV-F17 ராக்கெட், 2,367 கிலோ எடை கொண்ட EOS-05 செயற்கைக்கோளை, திட்டமிட்டபடி Sub-Geosynchronous Transfer Orbit-ல் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. இதுவரை GSLV ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே EOS-05தான் அதிக எடை கொண்டது என்றும், இந்தச் செயற்கைக்கோள் இறுதியாக சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள Geo-orbit பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’Eye in the sky’ என்று வர்ணிக்கப்படும் இந்தச் செயற்கைக்கோள், கிட்டத்தட்ட நிகழ்நேரத்தில் பூமியின் படங்களைப் பதிவுசெய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்க முடியும் என்றும், நாட்டின் முக்கியமான தேவைகளுக்கான Strategic Dataவை வழங்கும் வகையிலும் இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், Geo-orbit-ல் நிலைநிறுத்தப்பட உள்ள இந்தியாவின் முதல் பிரத்யேக Earth Observation imaging satellite என்ற சிறப்பையும் EOS-05 பெறுகிறது.

ISRO

இதுகுறித்து பேசியுள்ள ISRO தலைவர் வி. நாராயணன், GSLV-F17 ராக்கெட் EOS-05 செயற்கைக்கோளை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளதாகவும், செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் வெற்றிகரமாக விரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அனைத்து அமைப்புகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2,367 கிலோ எடை கொண்ட EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர