ஈரான்-அமெரிக்கா மோதல் காரணமாக, ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் LPG சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை மேற்கொண்டுவருவதால் இந்த மோதல் போராக மாறியது.
கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இந்த போர் 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் காரணத்தால் பல்வேறு உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து தயாரிக்கப்படும் சிலிண்டர் கேஸூக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெயிலிருந்து LPG எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பகுதிபடக் காய்ச்சி வடித்தல் முறை மூலம் பிரிக்கப்படுகிறது. இதனை Fractional Distillation என்பார்கள்.
இந்த முறைப்படி, கச்சா எண்ணெய் 350-400°C வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு, வெவ்வேறு கொதிநிலைகளின் அடிப்படையில் ஹைட்ரோகார்பன்களாக பிரிக்கப்படுகின்றன.
இதில் மிகக் குறைந்த கொதிநிலை கொண்ட புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்கள் (LPG) சுத்திகரிப்பு கோபுரத்தின் உச்சியில் சேகரிக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்டு திரவமாக்கப்படுகின்றன.
இப்படி தயாரிக்கப்படும் சிலிண்டர் கேஸை, இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. இந்தியாவின் மொத்த LPG நுகர்வில் 50% இறக்குமதி செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் வணிக ரீதியான LPG பயன்பாடு 18% உள்ளது. மேலும், 1.6 கோடி வீடுகளில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த சிலிண்டர் கேஸ் தயாரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா தலையீட்டால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால், தற்போது சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்க இந்தியாவிற்கு மறுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையாகும் நிலை வந்தால், இந்தியாவிற்கு இருந்த மாற்றுவழியும் அடைக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் சூழல் உருவாகும்.