mahua moitra on adani
mahua moitra on adani file image
இந்தியா

எம்.பி பதவியை இழப்பாரா மஹுவா மொய்த்ரா? செக் வைத்த நாடாளுமன்றக்குழு... நடக்கப்போவது என்ன?

யுவபுருஷ்

நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் பாஜக அரசு குறித்தும், அதானி குழும முறைகேடு குறித்தும் கேள்விக்கணைகளை தொடுத்து சிங்கமென கர்ஜித்து வருபவர்தான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இருந்தாலும், ஒருசிலர் மட்டுமே ஆளும் கட்சியை கேள்விகளின் மூலம் அதிரவைக்கின்றனர்.

அப்படி, காங்கிரஸில் ராகுல் காந்தி என்றால், திரிணாமூல் காங்கிரஸில் மஹுவா மொய்த்ரா இருக்கிறார். இந்நிலையில்தான், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஒருவரிடம் மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளது பாஜக.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவராக இருந்து 2 முறையாக எம்.பியாக இருந்து வருபவர் மஹுவா. நாடாளுமன்றத்திலும் சரி, சமூகவலைதளங்களிலும் சரி அதிரடியாக கேள்வி எழுப்பும் நபராக இருந்து வருகிறார் இவர். இந்நிலையில், அதானி குழுமம் குறித்து கேள்வி எழுப்ப மொய்த்ரா பணம் வாங்கியுள்ளார் என்ற தீயை கொளுத்திப் போட்டார் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய்.

Jai Anant Dehadrai

இதனை கையில் எடுத்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்க, அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விவகாரத்தை விசாரித்து வருகிறது.

“மக்களவையில் மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள, 61 கேள்விகளில், 50 கேள்விகள், அதானி குழுமம் தொடர்பானவை. அதானி குழுமம் தொடர்பாக இந்த கேள்விகளை எழுப்ப, மற்றொரு நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் உள்ளன” என்று மஹுவா மொய்த்ரா மீது நிஷிகாந்த் துபே புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரை மறுத்துள்ள மஹுவா மொய்த்ரா, ஜெய் ஆனந்த் தேஹத்ராய், நிஷிகாந்த் துபே ஆகிய இருவர் மீதும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 31ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், குற்றச்சாட்டை முன்வைத்துள்ள வழக்கறிஞர் ஆனந்த் தேஹத்ராய், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர்.

இந்நிலையில், குற்றச்சாட்டை வைத்த இருவரையும் அழைத்து நேற்று விசாரணை நடத்தியது நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக மாறிய நிலையில், முன்னதாகவே தொழிலதிபர் ஹிராநந்தனி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில், "அதானி குழுமம் குறித்து கேள்விகள் எழுப்ப எனக்கு தொடர்ந்து உதவுமாறு மஹூவா கேட்டுக்கொண்டார்.

அதற்காக தனது கடவுச்சொல்லையும் பகிர்ந்திருந்தார். அவருக்கு நான் உதவினேன்” என்று குறிப்பிட்டுருந்தார். ஆனால், பணம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், அதை மறுத்த ஹிராநந்தனி, என் கவனம் வணிகத்தில் மட்டுமே இருக்கிறது. அரசியலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுக்கவும் செய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மஹுவா மொய்த்ரா, “ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரம் ‘லெட்டர்ஹெட்’ இல்லாமல் வெள்ளைத் தாளில் எழுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். தொழிலதிபர் ஹிராநந்தனி தனது தொழிலை காப்பாற்றிக்கொள்ள இப்படிச் செய்திருக்கிறார்.

இதையெல்லாம் செய்து என்னை அச்சுறுத்த முடியாது. அதானி குழுமத்திற்கு எதிராக என் வாயை அடைக்கவே முயற்சிக்கின்றனர். ஆனால் ஒருபோதும் என்னை ஒடுக்க முடியாது. தொடர்ந்து கேள்விகளை கேட்பேன்” என்று கூறியுள்ளார். இந்த பிரமாணப்பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்றும், மொய்த்ராவின் லாகின் விவகாரங்கள் குறித்தும் மத்திய தொழில்நுட்ப மற்றும் உள்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு.

இந்த விளக்கம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சியினரை பழிவாங்கவே இதுபோன்ற அவதூறுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் வாதிடுகின்றன.

மஹுவா மொய்த்ரா மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, வழக்கு கோர்டுக்கு சென்றால், மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிபோகும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மறுபுறம், அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் எதிர்கட்சி எம்.பிக்கள் ஆளும் கட்சியால் தொடர்ந்து குறிவைக்கப்படுவதையும் மறுப்பதற்கில்லை.

எழுத்து: யுவராம் பரமசிவம்