mojtaba khamenei reuters
இந்தியா

மொஜ்தபா காமேனிக்கு என்ன ஆச்சு? வெளியில் தோன்றாததற்கு இதுதான் காரணம்! உண்மையை உடைத்த ஈரான் தூதர்!

ஈரானின் உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து பொதுவெளியில் தோன்றாமல் இருக்கும் மொஜ்தபா காமேனி குறித்து, அந்நாட்டு தூதர் மனம் திறந்து பேசியுள்ளார்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சிப்பதாகக் கூறி, அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்தனர். அலி காமேனியின் மரணத்துக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மொஜ்தபா காமேனி இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் மூலமாக மட்டுமே அவர் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

ALi Khamenei

குறிப்பாக, அவரது தந்தை அலி காமேனியின் இறுதிச் சடங்கில் உலக நாடுகளின் முக்கியத் தலைவர்களும் அவரது சகோதரர்கள் மூவரும் கலந்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், புதிய உச்சத் தலைவரான மொஜ்தபா காமேனி அங்கு இல்லாதது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதனால், மொஜ்தபா காமேனியின் தற்போதைய நிலை என்ன? அவர் எங்கிருந்து நாட்டை வழிநடத்துகிறார்? ஈரானின் முக்கிய முடிவுகளை உண்மையில் எடுப்பது யார்? போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்நிலையில், NDTV நடத்தும் உலக உச்சி மாநாடு 2026-இல் கலந்துகொண்டு பேசிய ஈரான் தூதர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, மொஜ்தபா காமேனியின் உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.

“எங்களது உச்சத் தலைவரைப் பற்றி பரவும் வதந்திகள் பொய்யானவை. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். தனது பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் அவருடன் ஏழு மணி நேரம் சந்திப்பு நடத்தியதாக அதிபர்கூடக் குறிப்பிட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மொஜ்தபா காமேனி தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலும் உண்மையல்ல என்று தூதர் கூறியுள்ளார்.

அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி

இதுகுறித்து அவர் கூறுகையில், “அவர் ஊடகங்கள் முன்னிலையில் தோன்றவில்லை. அவரை யாரும் நேரில் பார்க்கவும் இல்லை. ஆனால், அவர் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். அப்போது நான் ஈரானில் இருந்தேன். அவருடைய இரண்டு சகோதரர்களையும் சந்தித்தேன். மொஜ்தபா காமேனியும் அங்கு இருந்தார்” மொஜ்தபா காமேனி காயங்களிலிருந்து குணமடைந்து வருவதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காக நேரடியாகப் பொதுவெளியில் தோன்றாமல் நாட்டை வழிநடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தூதரின் இந்த கருத்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.