ஈஷா சிங் Pt Web
இந்தியா

புதுச்சேரி | தவெக கூட்டத்தில் கவனம் பெற்ற ஈஷா சிங்.. டெல்லிக்கு இடமாற்றம்.!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கடமை உணர்வுடன் செயல்பட்டதாக கவனம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஈஷா சிங், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்திடம் கடிந்து கொண்டதன் மூலம் அனைவராலும் பாராட்டப் பட்ட ஈஷா சிங் ஐபிஎஸ் அதிகாரி டெல்லிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் 49 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஈஷா சிங்

அதன்படி, புதுச்சேரியில் நீண்டகாலமாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பத்மா ஜெய்ஷ்வால் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டெல்லியில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி கின்னி சிங், புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையில் ஐஜியாக பணியாற்றி வந்த அஜித்குமார் சிங்லா, டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இவரை தொடர்ந்து, சீனியர் போலீஸ் எஸ்பியாக பணியாற்றிய ஈஷா சிங் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரஜீந்தர்குமார் குப்தா புதுச்சேரிக்கு காவல்துறை பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இடமாற்றத்துக்கான உத்தரவினை உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலர் ராகேஷ்குமார் சிங் வெளியிட்டுள்ளார்.

கடமை உணர்வுக்காக பாராட்டப்பட்ட ஈஷா சிங்.!

2024ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் சீனியர் எஸ்பி பொறுப்பை வகித்த ஈஷாசிங், செயல்திறன் மற்றும் நேர்மை காரணமாக மாநிலத்தில் பெருமளவு கவனம் பெற்றவர். 2021ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த ஈஷா சிங், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். புதுச்சேரியில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு சட்டம்– ஒழுங்கு நடவடிக்கைகளில் முன்னெடுப்புடன் செயல்பட்டு, பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இஷா சிங்

சமீபத்தில், புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்திடம் கடிந்து கொண்ட சம்பவத்தில் இஷா சிங் காட்டிய கடுமை சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி, கடமை உணர்வு கொண்ட அதிகாரியாக பாராட்டப்பட்டார்.