வங்காள விரிகுடா pt web
இந்தியா

“வங்காள விரிகுடாவை இந்திய விரிகுடா என மாற்றுங்கள்” - இணையத்தில் தீவிரமாகும் விவாதம்!

வங்காள விரிகுடாவை இந்திய விரிகுடா என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

PT WEB

செய்தியாளர் - ந.பாலவெற்றிவேல்

வங்காள விரிகுடாவை இந்திய விரிகுடா என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என மறுபெயர் இடுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட பிறகு இந்தியாவில் இது குறித்தான விவாதம் அதிகரித்துள்ளது.

வங்காள விரிகுடா உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா வகையிலான கடற்பரப்பை சேர்ந்ததாகும். இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் வங்காள விரிகுடாவின் எல்லை பரப்பில் அமைந்திருந்தாலும், வங்காள விரிகுடாவை புவியியல் ரீதியாக வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் நாடாக இந்தியா விளங்குகிறது.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்கு கடற்கரை மாநிலங்கள், விரிகுடாவின் எல்லையின் முக்கிய பகுதியாக இருப்பதை சுட்டிக்காட்டும் இணையவாசிகள், வங்காள விரிகுடாவின் அதிக பரப்பை கொண்டுள்ள இந்தியாவின் பெயரால் அழைக்கப்படுவதே பொருத்தமாகும் எனக் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் இந்த விவாதத்தை அமெரிக்கா, மெக்சிகோ வளைகுடாவின் மறுபெயரிடுதலுக்கான எதிர்வினையாகக் கருதுகின்றனர். மேலும் புவியியல் பெயர்கள் அரசியல் நோக்கங்களுக்காக மாற்றப்படுவதற்குப் பதிலாக வரலாற்று தொடர்ச்சியை மதிக்க வேண்டும் என்று சிலர் பரிந்துரைக்கின்றனர்.

இதுகுறித்து புவிசார் நிபுணர்கள் கூறும் போது விரிகுடா அல்லது வளைகுடா பகுதி எந்த இடத்தினால் உருவாகிறது என்பதை பொறுத்து அழைக்கப்படும் என்பதால் வங்காள விரிகுடா என ஆங்கிலேயர்கள் பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.

வங்காள விரிகுடா என்பதை வங்காளதேசம் என்பதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள மேற்கு வங்காள பகுதியையும் அதனோடு தொடர்பு படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. வங்காளம் என்கிற ஒட்டுமொத்த பகுதியினால் கடல் விரிகுடாவாக மாறுவதால் வங்காள விரிகுடா என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் முக்கிய போர்க்கப்பல்கள், கடல் வழித்தடங்கள், ராணுவ நடவடிக்கைகள், விண்வெளி மற்றும் அறிவியல் ஆய்வுகள், வங்காள விரிகுடாவில் மேற்கொள்ளப்படுவதால் இந்திய விரிகுடா என அழைக்கப்பட வேண்டும் என்கிற விவாதம் மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.