kakoli ghosh dastidar & Mamata Banerjee  web
இந்தியா

மம்தாவுக்கு அடி மேல் அடி.. மக்களவையிலும் பிளவுபடும் திரிணாமுல் காங்கிரஸ்!

சட்டமன்றத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றத்தைப்போலவே, மக்களவையிலும் குறைந்தது 20 எம்.பிக்கள் தனி அணியை உருவாக்கி டிஎம்சியிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

PT WEB

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததையடுத்து திரிணாமுல் காங்கிரஸில் அதிருப்தி வெடித்து, ரிதாபிரதா எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்துள்ளார். இதேசமயம், 18 எம்.பி.க்கள் ஓம் பிர்லாவைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பது மக்களவையிலும் திரிணாமுல் காங்கிரஸ் பிளவுபடும் அபாயத்தை காட்டுகிறது. ககோலி கோஷ் தஸ்திதர் தலைமையில் இந்த குழு செயல்படுகிறது.

செய்தியாளர்: M.மீரா

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் பெரும் தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளில் இருந்தும் விலகி வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது. இதற்கு உதாரணமாய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 58 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இது, மம்தாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. 

mamata banerjee & kakoli ghosh dastidar

இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எவரும் எதிர்பார்த்ததைவிட விரைவில் சிதையக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் 18 எம்பிக்கள் ஜூன் 8 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தகவல்களின்படி, இந்தக் குழுவை பரசாத் தொகுதி எம்.பி.யான ககோலி கோஷ் தஸ்திதர் வழிநடத்துகிறார் என்று கூறப்படுகிறது. இவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்வி குறித்து மக்களின் தீர்ப்பு கட்சியின் கொள்கைக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்று மம்தா பானர்ஜியை சாடி சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிளவு ஏற்படலாம் என்ற ஊகங்கள் வலுத்துள்ளன.

Kakoli Ghosh Dastidar

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்தியிலும் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக, மக்களவையில் கட்சியின் தலைமைக் கொறடா பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ககோலி கோஷ் தஸ்திதார் பலமுறை மம்தா பானர்ஜியைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.