திருப்பதி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 6591 சிறிது நேரத்தில் திரும்பியது. திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக , விமானம் சுமார் 40 நிமிடங்கள் அந்தப் பகுதியிலேயே வானில் வட்டமிடத் தொடங்கியது. பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் பத்திரமாக திருப்பதியில் தரையிறங்கியது.. இந்த சம்பவம் நடந்த போது, இரவு 7.55 மணியாகும். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்..
இந்த சம்பவம் குறித்து இண்டிகோவின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் "ஜூலை 20, 2025 அன்று திருப்பதியிலிருந்து ஹைதராபாத்திற்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 6591 இல் ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானிகள் திரும்பி திருப்பதியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினர் என்றும் விமானம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்" என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்த அறிக்கையில், "எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்றும் அவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தங்குமிடம் வழங்குவது உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.. மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் அடுத்து கிடைக்கக்கூடிய விமானங்களில் மீண்டும் அவர்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி விமான டிக்கெட்டின் முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோலவே "ஜூலை 17, 2025 அன்று டெல்லியில் இருந்து இம்பாலுக்கு இயக்கப்படும் 6E 5118 விமானத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானிகள் விமானத்தை திரும்பி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்க முடிவு செய்தனர்," என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேபோல 6E 6271 விமானத்தை இயக்கும் A320 நியோ விமானம், மும்பைக்கு திருப்பி விடப்பட்டு இரவு 9.52 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. மீண்டும் இதேபோல டெல்லியில் இருந்து கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பறக்கும் போது 6E 6271 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதாக இண்டிகோ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இப்படி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது குறித்தும், அடுத்தடுத்து விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்தும் அதிகாரிகள் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.