சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், இன்றும் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. தொழில்நுட்பக் கோளாறுகள், பாதகமான காலநிலை மற்றும் புதிய பணி விதிகள் ஆகிய இடையூறுகளால் சேவைகள் பாதிக்கப்பட்டதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
மேலும், பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிர்வாகம், விரைவில் சேவைகள் சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்திருந்தது. ஆனால், நேற்றும் இதே பிரச்னை நாடு முழுவதும் தொடர்ந்தது. 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. போதிய அளவில் விமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. பணியாளர்களின் பணி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் இக்குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இன்றும் (டிச.5) விமானச் சேவைகளின் கடுமையான பாதிப்புகளால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் முக்கிய விமான நிலையங்களில் இருந்து 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் மும்பை, புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து குறைந்தது 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை விமான நிலைய வட்டாரங்களின்படி, இன்று காலை முதல் மொத்தம் 104 விமானங்களும் பெங்களூருவில் இருந்து 102 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் இருந்து 92 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புனேவில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை 32 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார். நாக்பூரிலிருந்து வந்த ஒரு விமானமும் ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர சென்னை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்தும் இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கிடையே போதிய பணியாளர்கள் இல்லையெனில், விமானத்தை இயக்க இண்டிகோவை அனுமதிக்கவேண்டாம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விமானிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. மறுபுறம், டிசம்பர் 8ஆம் தேதி முதல் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் சேவை முற்றிலும் சீராகும் எனவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோவின் விமான இடையூறுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், தற்போதைய நிலைமை மற்றும் சிக்கலைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விமான நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இண்டிகோவின் விமானச் சேவை ரத்துக்கு அடிப்படைக் காரணம், விமானப் பணியாளர்கள் பற்றாக்குறைதான் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில், விமானப் பணியாளர்களுக்கான புதிய பணி நேர விதிகளை விமானப் போக்குவரத்துத் துறை கட்டாயமாக்கியது. இதன்படி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில், பைலட்டுகளின் வாராந்திர ஓய்வு அதிகரிக்கப்பட்டது. இரவு பயணங்களில் அவர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டது. புதிய விதிகளின்படி, பைலட்டுகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டதால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பயணங்களுக்கு போதுமான பைலட்டுகளை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த, இண்டிகோ தனது விமான அட்டவணையில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் காரணமாகவே, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இண்டிகோ சேவை ரத்தால் நாடு முழுவதும் விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தவிர, இந்தப் பிரச்னையால் இண்டிகோவின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்தியாவிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. தினசரி சுமார் 2,300 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை அந்த நிறுவனம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.