இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களில் ஹெ.சி.எல். நிறுவனமும் ஒன்று. இது, பல்வேறு மாநிலங்களிலும் தனது கிளைகளைப் பரப்பி சேவையாற்றி வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 316 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், 2024-25ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹெச்.சி.எல். டெக் நிறுவனத்தின் விஜயகுமார் உருவெடுத்துள்ளார். இவருக்கு ஆண்டு ஊதியமாக 10.85 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 94 கோடியே 60 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டிருக்கிறது.
விஜயகுமாரின் மொத்த சம்பளம் கடந்த ஆண்டைவிட 7.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை கூறுகிறது. அதே காலகட்டத்தில், நிர்வாக ஊழியர்களைத் தவிர, ஊழியர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 3.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டில் அவரது சம்பளம் சராசரி ஊழியர் ஊதியத்தை விட 662.5 மடங்கு அதிகமாகும். இதைவிட, கூடுதல் சிறம்பம்சமாக, நடப்பு நிதியாண்டில் விஜயகுமாரின் ஊதியத்தை 154 கோடி ரூபாயாக உயர்த்த ஹெச்.சி.எல். டெக். நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயகுமார் (57), PSG தொழில்நுட்பக் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 1994ஆம் ஆண்டு, HCL டெக்னாலஜிஸின் முழு உரிமையாளரான HCL Comnetஇல் மூத்த பொறியாளராக சேர்ந்தார். நிறுவனக் குழுவின் ஒரு பகுதியாக, தொலைதூர உள்கட்டமைப்பு மேலாண்மை முன்மொழிவை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அதனைத் தொடர்ந்து, 2016இல் அவர் HCL டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர், 2021ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் அப்போதைய தலைமை மூலோபாய அதிகாரி ஷிவ் நாடார் பதவி விலகியபோது, நிர்வாக இயக்குநரின் கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த மாதம், முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் நிர்வாகியாக அவருக்கு ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, விஜயகுமாரின் மறு நியமனத்தை செப்டம்பர் 1, 2025 முதல் மார்ச் 31, 2030 வரை அங்கீகரித்ததாக HCLTech தெரிவித்துள்ளது. ஐடி சேவைகள் - சூப்பர் லார்ஜ் பிரிவில், இந்தியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக ’ஃபார்ச்சூன் இந்தியா’வால் அவர் அங்கீகரிக்கப்பட்டார் மற்றும் நிறுவன முதலீட்டாளர் ஆராய்ச்சி 14வது வருடாந்திர ஆசிய நிர்வாகக் குழு கணக்கெடுப்பில் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார்.