கச்சா எண்ணெய் - எல்பிஜி சிலிண்டர் Pt web
இந்தியா

”பிற நாடுகளை விட எல்பிஜி விலை இந்தியாவில் தான் குறைவு” - மத்திய அரசு விளக்கம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவு என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PT WEB

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்ட போர், இன்னும் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து வருகிறது.  இதன்காரணமாக, ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட முக்கிய எரிவாயு தடங்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இந்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தான், இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 29 ரூபாய் உயர்த்தியிருக்கிறது.

சிலிண்டர் விலை உயர்வு

இதையடுத்து, சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவு என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லியில்14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 942 ரூபாய் என்றும் உஜ்வலா திட்டத்தின் கீழ் 300 ரூபாய் மானியம் அளிக்கப்படுவதால் ஏழ்மையிலுள்ள பல குடும்பங்கள் 642 ரூபாய் விலையில் சிலிண்டர் வாங்க முடிகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் பாகிஸ்தானில் இது 1046 ரூபாய், நேபாளத்தில் 1207 ரூபாய், வங்கதேசத்தில் 1225 ரூபாய், இலங்கையில் 1241 ரூபாயாக இருப்பதாக அரசு கூறியுள்ளது. முன்னேறிய நாடுகளில் அமெரிக்காவில் 1755 ரூபாய், ஆஸ்திரேலியாவில் 1765 ரூபாய், கனடாவில் 2411 ரூபாய்க்கு விற்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிவாயு தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் வாங்குவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.