INDIAN OIL  GOOGLE - REUTERS
இந்தியா

எரிபொருள் சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம்? சொந்தக் கப்பல்களைக் களமிறக்கும் Indian Oil!

கப்பல் வாடகை 4 மடங்கு உயர்வு! சொந்தக் கப்பல்களைக் களமிறக்க முடிவு செய்த இந்தியன் ஆயில்

PT WEB

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

இந்தியாவின் பெரும்பான்மையான எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கியப் பங்கு வகிப்பது பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். இதுவரை கச்சா எண்ணெய், LPG ஆகியவற்றைக் கொண்டுவர Indian Oil பெரும்பாலும் மற்ற நிறுவனங்களின் கப்பல்களை வாடகைக்கு எடுத்தே பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்தக் கப்பல் போக்குவரத்தில்தான் இப்போது பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

LPG GAS

மேற்கு ஆசியாவில் அதிகரிக்கும் பதற்றம், குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகள், கப்பல் வாடகையையும் காப்பீட்டுச் செலவையும் உயர்த்தியிருக்கின்றன. பொதுவாக, ஒரு பேரல் கச்சா எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுவர இந்தியன் ஆயில் நிறுவனம் சுமார் 2 முதல் 2.50 டாலர் வரை செலவிடுகிறது. ஆனால், கூடுதல் கப்பல்களை வாடகைக்கு எடுக்கும்போது செலவு 8 முதல் 10 டாலராக உயர்கிறது.

LPG போக்குவரத்திலும் இதே நிலைதான். ஒரு டன் LPG-ஐக் கொண்டுவர வழக்கமாக சுமார் 40 டாலராக இருந்த கப்பல் கட்டணம், தற்போது 160 முதல் 180 டாலர் வரை அதிகரித்திருக்கிறது. இந்தச் செலவைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் இந்தியன் ஆயில் நிறுவனம் சொந்தமாகக் கப்பல்களை வாங்க முடிவு செய்துள்ளது.

தற்போது அந்த நிறுவனம் 3 கச்சா எண்ணெய் கப்பல்களையும், 9 LPG கப்பல்களையும் நீண்டகால வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், சொந்தமாகவும் கப்பல்களை வாங்குவதற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான டெண்டர்களும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் Make in India திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இந்தக் கப்பல்களைக் கட்டமைப்பதற்கான வாய்ப்புகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

oil Ship

கப்பல் வாங்குவதோடு மட்டும் இந்தியன் ஆயில் நிறுத்திக்கொள்ளாமல் எண்ணெய் இறக்குமதிக்கான நாடுகளையும் மாற்றி வருகிறது. முன்பு மத்திய கிழக்கு நாடுகளை அதிகம் சார்ந்திருந்த இந்தியா, மேற்கு ஆசியாவில் பிப்ரவரி மாத இறுதியில் போர் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மற்ற நாடுகளையும் நாடத் தொடங்கியிருக்கிறது. தற்போது ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு 24 சதவீதமாக இருக்கிறது. ஆப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்கா, வெனிசுலா ஆகிய நாடுகளிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது.

இதற்கிடையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்திருக்கிறது. இதனால் எதிர்பாராத விநியோகத் தடைகள் ஏற்பட்டாலும் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எண்ணெய் கையிருப்பையும் இந்தியன் ஆயில் அதிகரித்திருக்கிறது.
வழக்கமாக 33 முதல் 35 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைக் கையிருப்பில் வைத்திருக்கும் நிறுவனம், தற்போது அதை 39 நாட்களாக உயர்த்தியிருக்கிறது. அதேபோல, 20 நாட்களுக்குத் தேவையான LPG-யும், 23 முதல் 25 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசலும் கையிருப்பில் உள்ளன.

கப்பல் போக்குவரத்துக்கான செலவைக் குறைப்பது, இறக்குமதிக்கான நாடுகளைப் பல்வகைப்படுத்துவது, எரிபொருள் கையிருப்பை அதிகரிப்பது என ஒரே நேரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.