ரிசர்வ் வங்கி Pt web
இந்தியா

5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 29% வளர்ச்சி., தேசிய வளர்ச்சியை விஞ்சிய 10 மாநிலங்கள்.! தமிழ்நாடு?

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 முக்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இது குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு, பல மாநிலங்களில் ஏற்பட்ட அதீத பொருளாதார வளர்ச்சியே காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) குறித்த ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, 2020-21 நிதியாண்டுக்கும் 2024-25 நிதியாண்டுக்கும் இடையில் பல மாநிலங்கள் உறுதியான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளன என்றும் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 முக்கிய மாநிலப் பொருளாதாரங்கள், 45% வரை வளர்ச்சியடைந்து, தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகளவில் முன்னேற்றம் கண்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே, காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020-21 நிதியாண்டில் ரூ. 145.35 லட்சம் கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ. 187.97 லட்சம் கோடியாக உயர்ந்து, ஐந்து ஆண்டுகளில் 29% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி குறித்தான ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, அஸ்ஸாம் 45% வளர்ச்சியுடன், வேகமாக வளர்ந்து வரும் மாநிலப் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2020-21 நிதியாண்டில் ரூ. 2.4 லட்சம் கோடியிலிருந்து 2024-25 நிதியாண்டில் ரூ. 3.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மாநிலத்தின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் வடகிழக்கில் அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு முதலீடுகளைச் சார்ந்துள்ளது.

தமிழ்நாடு 39% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ. 12.4 லட்சம் கோடியிலிருந்து ரூ. 17.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் வலுவான உற்பத்தித் தளம் உள்ளது, இதில் ஆட்டோமொபைல்கள், மின்னணுவியல், ஜவுளி மற்றும் சேவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அடுத்ததாக கர்நாடகா 36% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ. 11.5 லட்சம் கோடியிலிருந்து ரூ. 15.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப சேவைகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவை அதன் முக்கிய பலங்களாக இருக்க்கின்றன.

ரிசர்வ் வங்கியின் தரவுகள்

உத்தரப் பிரதேசம் ஐந்து ஆண்டுகளில் 35% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ. 11.7 லட்சம் கோடியிலிருந்து ரூ. 15.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதன் பெரிய உள்நாட்டுச் சந்தை, விவசாயத் தளம், விரிவடைந்து வரும் தொழில்துறை மற்றும் தளவாட உள்கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ராஜஸ்தான் 34% வளர்ச்சியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. அதன் பொருளாதாரம் ரூ. 6.8 லட்சம் கோடியிலிருந்து ரூ. 9.1 லட்சம் கோடியாக விரிவடைந்துள்ளது. சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுலா மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மாநிலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பவையாக உள்ளன.

பிகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டும் 33% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பீகாரின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயம் மற்றும் சேவை துறையால் உந்தப்பட்டு, ரூ. 4.0 லட்சம் கோடியிலிருந்து ரூ. 5.3 லட்சம் கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், ஆந்திரப் பிரதேசம் விவசாயம், துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் ஆகியவற்றின் ஆதரவுடன் ரூ. 6.5 லட்சம் கோடியிலிருந்து ரூ. 8.7 லட்சம் கோடியாக விரிவடைந்துள்ளது.

கோப்புப் படம்

சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களும் தலா 31% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சுரங்கம், மின் உற்பத்தி மற்றும் எஃகுத் தொழில்களால் வழிநடத்தப்பட்டு, சத்தீஸ்கரின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ. 2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ. 3.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கனிமங்கள் மற்றும் கனரகத் தொழில்களின் ஆதரவுடன் ஜார்க்கண்டின் பொருளாதாரம் ரூ. 2.3 லட்சம் கோடியிலிருந்து ரூ. 3.0 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தெலுங்கானா 30% வளர்ச்சியுடன் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ. 6.4 லட்சம் கோடியிலிருந்து ரூ. 8.4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், மருந்துத் தொழில்கள் மற்றும் நகர்ப்புற சேவைகள் ஆகியவை இந்த மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன.