ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜூன் 25) இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள், 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
இப்பயணம் குறித்து பேசிய சுக்லா, "எனது அன்பான நாட்டு மக்களுக்கு வணக்கம். என்ன ஒரு பயணம்! 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் இருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம். வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோள்களில் பொறிக்கப்பட்ட திரங்கா, நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்று சொல்கிறது. என்னுடைய இந்தப் பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு தொடக்கமல்ல, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கு ஒரு தொடக்கமாகும். இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நெஞ்சும் பெருமையால் நிரம்ப வேண்டும்... ஒன்றாக, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தைத் தொடங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!" எனத் தெரிவித்தார்.
சுபன்ஷு சுக்லா புறப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து - 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11இல் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்குப் புறப்பட்ட இடமான ஏவுதள வளாகம் 39Aலிருந்து ஏவப்பட்டது.
இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரர் ஆவார்.
இதற்கு முன்பு சர்மா 40 ஆண்டுகளுக்கு முன்பு, 1984ஆம் ஆண்டு விங் கமாண்டர் ராகேஷ் சென்றிருந்தார். தற்போது 39 வயதான போர் விமானியான சுபன்ஷுவை, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்கான முதன்மை விண்வெளி வீரராக இஸ்ரோ தேர்வு செய்தது.
விண்கலத்தின் பைலட்டான குரூப் கேப்டன் சுக்லா, விண்ணில் செலுத்தப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலில் இருந்தார். இது குழுவினர் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு செயல்முறை பயிற்சியாகும்.
15 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில், ஆக்ஸியம்-4 மிஷனின் நான்கு பேர் கொண்ட குழுவினர் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அவற்றில் ஏழு இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளன.
வானிலை மற்றும் ஆக்சிஜனேற்றி கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மே 29 முதல் இந்த பணியின் ஏவுதல் பல முறை தாமதமானது. ஜூன் 25 என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் அறிவிக்கப்பட்ட ஆறாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட இறுதி தேதியாகும்.
ஃபால்கன் 9 ராக்கெட் என்பது, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால், உருவாக்கப்பட்ட ஒரு நடுத்தர-லிஃப்ட் கொண்ட இரண்டு நிலை ராக்கெட் ஆகும். இது ஓரளவு மீண்டும் பயன்படுத்தக்கூடியது ஆகும். முதல் நிலை பாதுகாப்பாக தரையிறங்கவும் மீண்டும் பறக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் செலவு மற்றும் திரும்பும் நேரம் குறைகிறது. இந்த ராக்கெட் 16 பணியாளர்கள் கொண்ட பணிகள் மூலம் முடிக்கப்பட்டதுடன், 100 சதவீத பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
ஆக்ஸியம் 4 பணி என்பது ஹூஸ்டனை தளமாகக் கொண்ட ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசா இடையேயான ஒரு வணிக முயற்சியாகும். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மொத்தம் நான்கு உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் விண்கலத்தில் ஒரு இருக்கைக்கு இந்தியா ரூ.550 கோடி செலுத்தியுள்ளது.
’மிஷன் ஆகாஷ் கங்கா’ என்றும் அழைக்கப்படும் இந்தப் பணி, ஜூன் 2023ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இந்தியா-அமெரிக்க கூட்டு அறிக்கையிலிருந்து பிறந்தது.
இந்த ஒப்பந்தம், இந்திய விண்வெளி வீரரை ISSக்கு அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா இடையே கூட்டு முயற்சியை வடிவமைத்தது. இது இந்திய-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.