மீண்டும் மீண்டும்.. 5வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட இந்திய வீரரின் விண்வெளிப் பயணம்! காரணம் என்ன?
ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஜூன் 22ஆம் தேதி செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆக்சியம்-4 மிஷன் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய விண்வெளி வீரரின் பயணம் 5வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 8ஆம் தேதி இந்த விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக, ஜூன் 10ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஜூன் 10ஆம் தேதி புறப்பட வேண்டிய பயணமும், திரவ ஆக்சிஜன் கசிவு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. பின்னர், தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்ட பிறகு, விண்வெளிப் பயணத்திற்கான தேதி (ஜூன் 19) குறிக்கப்பட்டது. பின்னர் வானிலை மாற்றம், வீரர்களின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அதிலும் மாற்றம் செய்யப்பட்டு, அது ஜூன் 22 என குறிக்கப்பட்டது.
Axiom4 மூலம் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இவர்கள், 14 நாட்கள் அங்கு தங்கி 60 அறிவியல் பரிசோதனைகளை செய்யவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.