இந்தியர்கள் பழங்கள், காய்கறிகள், முட்டைகளுக்கு செலவிடுவதை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கே அதிகம் செலவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் ரசாயனங்களை சேர்த்து நீண்ட நாள் கெடாமல் இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகள் உருவாக்கப்படுகின்றன. பிஸ்கட்டுகள் சிப்ஸ் நொறுக்குத்தீனிகள் மென்பானங்கள் போன்ற பதப்படுத்த உணவுகள் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் என உடல் நலனுக்கு தீங்கிழைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கவே மக்கள் அதிகம் செலவிடுவது அரசின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வீடுகளின் நுகர்வு பழக்கவழக்கங்கள் குறித்து, மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
கிராமப்புறங்களில் மாதாந்திர செலவுகளில் 47 சதவீதம் உணவுக்கே செல்வதும் அதில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அதிகபட்சமாக 10 % செலவிடுவதும் தெரியவந்துள்ளது. காய்கறிகளுக்கு 6.85%, தானியங்களுக்கு 4.99%, முட்டை, இறைச்சிக்கு 4.92%, பழங்களுக்கு 3.85% செலவழிப்பது தெரியவந்துள்ளது.
நகர்ப்புறங்களை பொறுத்தவரை மாதாந்திர செலவுகளில் உணவுக்காக 39% செலவிடும் நிலையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு 11%, காய்கறிகளுக்கு 4.12%, பழங்களுக்கு 3.87% தானியங்களுக்கு 3.76%, முட்டை, இறைச்சி, மீன் வாங்க 3.56% செலவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களின் உணவுப்பழக்க வழக்கங்கள் 20 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றம் கண்டுள்ளதும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நாடெங்கும் சுமார் 2 லட்சத்து 61 ஆயிரம் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..