விக்னேஷ் பட்டாபிராமன்
விக்னேஷ் பட்டாபிராமன் முகநூல்
இந்தியா

இங்கிலாந்தில் கோவையை சேர்ந்தவர் மரணம் - கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறை! 8 பேர் கைது

ஜெனிட்டா ரோஸ்லின்

விக்னேஷ் பட்டாபிராமன் என்ற இந்தியர் (தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்தவர்), இங்கிலாந்தின் ரீடிங் பகுதியில் உள்ள வெல் என்ற இந்திய உணவகத்தின் மேலாளராக பணியாற்றி வந்தார். கோவையை சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, தன் மனைவி ரம்யாவுடன் இவர் பிரிட்டனுக்கு சென்றுள்ளார்.

அங்கு சொந்தமாக உணவகம் வைக்க வேண்டும் என்ற கனவில் இருந்த இவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தன் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கடுகன் பிளேஸ் என்ற சந்திப்பில் இரவு 11:50 மணியளவில் வந்த வாகனம் ஒன்று இவர்மீது வேகமாக வந்து மோதியுள்ளது.

இதனால் பலத்த காயம் அடைந்த விக்னேஷ், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அங்கிருந்தோரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது. முதலில் இதை சாலை விபத்தாக பலரும் கூறிய நிலையில், இது கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்த நபரொருவர், விக்னேஷை இறுதியாக பலமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து, தேம்ஸ் பகுதி போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், 24 வயதுடைய ஷாசெப் காலித் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் 20, 21, 24, 27, 31, 41, 48 வயதுடைய அதே ஊரை சேர்ந்த மேலும் 7 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அங்குள்ள குற்றப்பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இறந்த விக்னேஷின் குடும்பத்துடன், பயிற்சி பெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர் இறந்ததற்கான காரணங்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவத்தில் நேரில் கண்ட அப்பகுதியினர், ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் தேம்ஸ் காவல்நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முழு ஈடுபாட்டுடன், தனது தொழிலில் மூத்த நிர்வாகி பொறுப்பினை அடைய வேண்டும் என்று விரும்பிய விக்னேஷ் பட்டாபிராமனின் திடீர் மறைவு அவர் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விக்னேஷின் தாய் தந்தை, உடனடியாக யு.கே செல்ல வேண்டுமென்பதால், அந்நாட்டு அரசிடம் ‘எமெர்ஜென்சி விசா’ கொடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே விக்னேஷின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, விக்னேஷின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து, அதற்காக கிளவுட் ஃபண்டிங் மூலமாக இதுவரை சுமார் ரூ.41 லட்சம் திரட்டியுள்ளனர்.