ராஜஸ்தான் | வனப்பகுதிக்கு அருகில் 9 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட 16 வயது மாணவனின் உடல்!
16 வயது மாணவனின் உடல், 9 நாட்களுக்கு பிறகு ராஜஸ்தானில் உள்ள வனப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மத்தியப் பிரதேசத்தினை சேர்ந்த ரசித் சோந்தியா என்ற மாணவர், விடுதி ஒன்றில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு தன்னை தயார் படுத்து கொண்டு வந்துள்ளார்.
16 வயதான ரசித், கடந்த பிப்ரவரி 11 தேதி முதல் விடுதி திரும்பவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. கடைசியாக மாணவர் விடுதியில் இருந்து கோச்சிங் செண்டருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அவரை தேடும் பணியில் அப்பகுதி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரசித் விடுதி அறையில் சோதனை செய்து பார்த்ததில், அவர் கோவிலுக்கு போவதாக குறிப்பிடப்பட்ட ஒரு குறிப்பை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் தீவிர சோதனைக்கு பிறகு, சிசிடிசி காட்சிகள் கிடைத்துள்ளன. அதனை சோதனை செய்து பார்த்ததில், ரசித் கோவில் பகுதிக்கு வண்டியை எடுத்துச் சென்றதும், அதன்பிறகு அருகில் இருந்த வனப்பகுதியில் நுழையும் காட்சிகளும் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில், மாணவனின் பை, மொபைல் போன், அறை சாவி மற்றும் இதர பொருட்களை கோவில் அருகிலும் மாணவனின் உடலை வனப்பகுதிக்கு அருகிலும் போலீசார் மீட்டுள்ளனர். மாணவரின் உடல் வனப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை விலங்கு ஏதேனும் தாக்கியிருக்குமோ என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.