புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி முகநூல்
இந்தியா

உணவு கொடுத்தது ஒரு குத்தமா?புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி; ரூ.80,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

பலமுறை எச்சரிக்கை விடப்படும் இதை செய்ததால் மூதாட்டிக்கு இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு ரூ.80000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்திருக்கிறது. இந்நிலையில், ’புறக்காளுக்கு உணவு அளித்தது குத்தமாடா’ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிங்கப்பூர் நாட்டின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சண்முகானந்தம் ஷியாமலா (வயது 70) என்ற பெண் வசித்து வருகிறார்.

இவர் தனது வீட்டின் அருகில் இருக்கும் புறாக்களுக்கு எப்போதும் உணவளிப்பது வழக்கம். ஆனால், சிங்கப்பூரில் பொதுவெளியில் பறவைகள், விலங்களுகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென்றால் வனவிலங்குகள் மேலாண்மை அதிகாரியிடமிருந்து அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், சண்முகானந்தம் ஷியாமலா, எந்த அனுமதியும் பெறாமல் புறாக்களுக்கு உணவு அளித்துவந்துள்ளார்.

ஏற்கெனவே, இவர்மீது இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்றம் எச்சரிக்கை விட்டிருந்தது. ஆனால், இதை கருத்தில் கொள்ளாத ஷியாமலா 2024 ஆம் ஆண்டு தொடர்ந்து புறாக்களுக்கு உணவு அளித்துவந்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி புறாக்களை பிடிக்கும் பயிற்சியில் அதிகாரிகள் இறங்கியபோது, அதை ஷியாமலா தடுத்ததாக கூறப்படுகிறது . மேலும், அவற்றை பிடிக்க வேண்டாம் என்றும், அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபடும்போது அவற்றை துரத்துவதற்கு கையில் உலோக கம்பையும் வைத்திருந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக ஷியாமலா மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த சிங்கப்பூர் கோர்ட்டு, சட்டவிரோதமாக புறாக்களுக்கு உணவு அளித்ததாக ஷியாமலாவுக்கு 1,200 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

மேலும், அவரது வயதை கருத்தில் கொண்டு குறைந்த அளவுதான் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அபராதத்தை கட்ட முடியவில்லை எனில், இரண்டு நாட்கள் சிறைவாசம் அனுபவிக்கவும் நிதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.