அதானி, முகுல் ரோஹத்கி, மகேஷ் ஜெத்மலானி, நளின் கோஹ்லி எக்ஸ் தளம்
இந்தியா

“குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை” - அதானிக்கு ஆதரவாக களமிறங்கிய வழக்கறிஞர்கள்.. ராகுலுக்கு எதிராய் பாஜக

“அமெரிக்கா நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது” என அதானி குழுமம் இன்று மீண்டும் தெரிவித்துள்ளது.

Prakash J

அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதானி, அமெரிக்கா

அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்திய அரசியலிலும் அதானி புயல் வீசத் தொடங்கியுள்ளது. மேலும், அவருடய பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன. அமெரிக்கா வெளியிட்ட குற்றப்பத்திரிகையை தொடர்ந்து, அதானி குழுமம் இதுவரை அதன் பட்டியலிடப்பட்ட 11 நிறுவனங்களில் அதன் சந்தை மூலதனத்தில் டாலர் 55 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது.

இன்று, மீண்டும் அறிக்கை வெளியிட்ட அதானி குழுமம்

இந்த நிலையில், “அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது” என அதானி குழுமம் இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிக்கையில், “அதானி, அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டப்படி அவர்கள்மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அமெரிக்கா நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. DoJ குற்றப்பத்திரிகையில், இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு அதானி நிர்வாகிகளால் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குற்றப்பத்திரிகையில் லஞ்சம் கொடுக்க வாக்குறுதியளிக்கப்பட்டது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான, ஆதாரமற்ற அமெரிக்க நடவடிக்கை அறிக்கைகளால் அதானி குழுமத்திற்கு கடுமையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி மீது குற்றஞ்சாட்டி வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. அமெரிக்க அரசு வக்கீல்களின் குற்றச்சாட்டில் லஞ்சம் கொடுத்தது பற்றி குறிப்பிடப்படவில்லை.
முகுல் ரோஹத்கி, இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல்

அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து முகுல் ரோஹத்கி விளக்கம்

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி, ''ஆரம்பத்தில், இவை எனது தனிப்பட்ட சட்டக் கருத்துகள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நான் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் அல்ல. நான் ஒரு வழக்கறிஞர். நான் அதானி குழுமத்திற்காக பல வழக்குகளில் ஆஜராகி வருகிறேன். அதானி மீது குற்றஞ்சாட்டி வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. அமெரிக்க அரசு வக்கீல்களின் குற்றச்சாட்டில் லஞ்சம் கொடுத்தது பற்றி குறிப்பிடப்படவில்லை.

எந்த வகையில், யாருக்கு லஞ்சம் தரப்பட்டது என்பதும் குறிப்பிடப்படவில்லை. மொத்தமாக முன்வைக்கப்பட்ட 5 குற்றச்சாட்டுகளில், லஞ்சம், நீதித்துறைக்கு இடையூறு விளைவித்தல் தொடர்புடைய முதலாவது மற்றும் ஐந்தாவது குற்றச்சாட்டுகளில் கவுதம் அதானியும், அவரது மருமகன் சாகர் அதானியும் குறிப்பிடப்படவில்லை. அவர்களது நிறுவன அதிகாரிகள்கூட குறிப்பிடப்படவில்லை. வேறு சிலரது பெயர்களே உள்ளன. அதானியும் இதில் சம்பந்தப்பட்டவர்களும் இந்தக் குற்றப்பத்திரிகைக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் பதிலளிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

“குற்றப்பத்திரிகையில் எந்த தகவல்களும் இல்லை”

தொடர்ந்து அவர், “மேலும், ஒரு குற்றப்பத்திரிக்கையைப் பார்க்கும்போது, ​​​​அதில் செய்யப்பட்ட விஷயங்கள் கூறப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில், சில நபர்களுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தக் குற்றப்பத்திரிகையில் எந்தப் பெயரோ விவரமோ தெரிவிக்கப்படவில்லை. யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது, எந்த ஒப்பந்தத்திற்காக கொடுக்கப்பட்டது என எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், இதுகுறித்த தகவல்களை, அவர்கள் பின்னர் பகிர்ந்துகொள்வார்களா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஆவணங்களில் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணங்களிலும் லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை.
முகுல் ரோஹத்கி, இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல்

”அதானி மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கங்களுக்கானது”- மகேஷ் ஜெத்மலானி

இதேபோல் மற்றொரு மூத்த வழக்கறிஞரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான மகேஷ் ஜெத்மலானி, “அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டை முற்றிலும் அரசியல் நோக்கங்களுக்காக காங்கிரஸ் அதிகமாகச் சுமத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர், “இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற விசாரணையை கோருமுன் எதிர்க்கட்சிகள் நம்பகமான ஆதாரங்களை வழங்க வேண்டும். காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை, முற்றிலும் தவறானது. சோலார் எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஏதேனும் சதி நடந்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆதாரம் என்ன (குற்றச்சாட்டில் அப்படி எதுவும் இல்லை). இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மிகவும் பயனுள்ள வணிகங்களை மேற்கொண்டுள்ள இந்தியக் குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி கண்மூடித்தனமாக நம்பியுள்ளது” எனப் பதிலளித்தார்.

”காங்கிரஸுக்கு எதிராக ரஃபேல் மற்றும் பெகாசஸ் வழக்குகள் கையில் எடுக்கப்படும்”

மேலும் அவர், “அதானி குழுமம் அல்லது பத்திரங்களை வழங்கிய நிறுவனமான அதானி கிரீன், இந்தியாவில் எந்தத் தவறும் செய்திருக்கவில்லை. முற்றிலும் அரசியல் நோக்கங்களுக்கானது. குற்றப்பத்திரிகையை வெளியிட்ட அமெரிக்க நீதிபதி, என்ன ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்தார் எனத் தெரியவில்லை. இது இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் சதி. நம்பகமான ஆதாரங்களை பொதுக் களத்தில் வெளியிடாத வரையில், இந்தியாவில் உள்ள எந்த அதிகாரமும் அல்லது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதன்மூலம் எதிர்க்கட்சி, நாடாளுமன்றத்தைச் சீர்குலைக்க விரும்புகிறது. இது முற்றிலும் தேவையற்றது" எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் தொடர்பான ரஃபேல் மற்றும் பெகாசஸ் வழக்குகளை நான் கையில் எடுக்கிறேன்
நளின் கோஹ்லி. பாஜக செய்தித் தொடர்பாளர்
நளின் கோஹ்லி

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞரும் பாஜக செய்தித் தொடர்பாளருமான நளின் கோஹ்லி, "நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஸ்டாண்டர்ட் லைன் நிரபராதி. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் தொடர்பான ரஃபேல் மற்றும் பெகாசஸ் வழக்குகளை நான் கையில் எடுக்கிறேன். அவர்களுக்கு நாடாளுமன்றத்தைச் சீர்குலைப்பதே வழக்கமாகிவிட்டது” எனப் பதிலளித்துள்ளார்.